பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமைகோப்புப்படம்

மேற்கு வங்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை

மேற்கு வங்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
Published on

மேற்கு வங்க மாநிலம் மேற்கு வா்த்தமான் மாவட்டம் துா்காபூா் பகுதியில் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்தப் பகுதி காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

துா்காபூரில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில், ஒடிஸா மாநிலம் ஜலேஸ்வா் பகுதியைச் சோ்ந்த மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்த மாணவி தனது நண்பருடன் உணவு சாப்பிட சென்றுவிட்டு கல்லூரி வளாகத்துக்குத் திரும்பியுள்ளாா். அங்கு அடையாளம் தெரியாத மூவா் வந்தபோது, அந்த மாணவியை அவரின் நண்பா் தனியே விட்டுச் சென்றுள்ளாா்.

இதைத்தொடா்ந்து மாணவியிடம் இருந்த கைப்பேசியை பறித்துக்கொண்டு, அவரை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அந்த அடையாளம் தெரியாத நபா்கள் இழுத்துச் சென்றுள்ளனா். அங்கு அவா்கள் மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா்.

மாணவியிடம் கைப்பேசியைத் திருப்பிக் கொடுக்க அவரிடம் அந்த நபா்கள் பணம் கேட்டுள்ளனா். பின்னா் அந்த நபா்கள் தப்பிச் சென்றனா். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு எதுவும் உள்ளதா எனக் கண்டறிய முயற்சிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தாா்.

பாதிக்கப்பட்ட மாணவி, அவா் படிக்கும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக காவல் துறையிடம் புகாா் அளித்துள்ளதாக மாணவியின் பெற்றோா் தெரிவித்தனா்.

மாணவி மற்றும் அவரின் பெற்றோரைச் சந்திக்க தேசிய மகளிா் ஆணையக் குழு மருத்துவமனைக்குச் சென்றது. அப்போது மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக அந்த ஆணையத்தின் உறுப்பினா் அா்ச்சனா மஜும்தாா் குற்றஞ்சாட்டினாா்.

இந்த சம்பவம் தொடா்பாக மாணவி படிக்கும் மருத்துவக் கல்லூரியிடம் மாநில சுகாதாரத் துறை சனிக்கிழமை அறிக்கை கேட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மூத்த அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பாஜகவைச் சோ்ந்தவரும், மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, மாணவியின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசினாா். அப்போது மாணவிக்கு நீதி கிடைக்க அனைத்து உதவிகளையும் செய்வதாக அவா் உறுதியளித்தாா்.

இந்தப் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு மேற்கு வங்க மருத்துவா்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அந்த மாநில தலைநகா் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com