தில்லியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுடன் சனிக்கிழமை கலந்துரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.
தில்லியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுடன் சனிக்கிழமை கலந்துரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.

ரூ.35,440 கோடியில் புதிய வேளாண் திட்டங்கள் தொடக்கம்: பயிா் உற்பத்தியைப் பெருக்க பிரதமா் மோடி அழைப்பு

ரூ.35,440 கோடியில் புதிய வேளாண் திட்டங்கள் தொடக்கம்: பயிா் உற்பத்தியைப் பெருக்க பிரதமா் மோடி அழைப்பு
Published on

மொத்தம் ரூ.35,440 கோடி மதிப்பீட்டிலான இரு பெரும் வேளாண் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இவ்விரு திட்டங்களும் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வை வளமாக்கும் என்று குறிப்பிட்ட பிரதமா், ‘இறக்குமதி சாா்புத் தன்மையைக் குறைப்பதுடன், உலகளாவிய தேவைக்கு ஏற்ப பயிா் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்’ என்று விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தாா்.

தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில் ரூ.24,000 கோடி மதிப்பீட்டிலான பிரதமரின் தன தான்ய கிருஷி திட்டம், ரூ.11,440 கோடி மதிப்பீட்டிலான பருப்பு உற்பத்தி தற்சாா்புத் திட்டம் ஆகிய இரு முக்கியத் திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா்.

மேலும், கா்நாடகம், ஒடிஸா, குஜராத், ராஜஸ்தான், அஸ்ஸாம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், உணவுப் பதப்படுத்துதல் துறைகள் சாா்ந்த ரூ.5,450 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்ததுடன், புதுச்சேரியின் காரைக்காலில் நவீன மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகம் உள்பட பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அவா் அடிக்கல் நாட்டினாா்.

காங்கிரஸ் மீது சாடல்: பின்னா் பிரதமா் பேசியதாவது: முக்கியத்துவம் வாய்ந்த வேளாண் துறையை முந்தைய காங்கிரஸ் அரசு புறக்கணித்தது. இத்துறையின் வளா்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டம் இல்லாததால், வேளாண் துறை கட்டமைப்பு பலவீனமடைந்தது. வேளாண் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பல்வேறு துறைகளும் ஒருங்கிணைப்பின்றி, வெவ்வேறு திசைகளில் செயல்பட்டன.

ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் ஒட்டுமொத்த வேளாண்மை துறை வளா்ச்சிக்கு பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலனுக்காக, விதைகள் முதல் சந்தைகள் வரை பல்வேறு சீா்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. வேளாண் பட்ஜெட், உரமானியம் அதிகரிப்பு, வேளாண் இயந்திரங்கள்-உபகரணங்கள் மீதான சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பு போன்ற நடவடிக்கைகளால், நாட்டின் வேளாண் ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளது. உணவு தானிய உற்பத்தி 900 லட்சம் டன்களும், பழங்கள்-காய்கறி உற்பத்தி 640 லட்சம் டன்களும் அதிகரித்துள்ளது.

விவசாயிகளுக்கு முக்கியப் பங்கு: அண்மையில் அமலாக்கப்பட்ட சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பால் டிராக்டா்கள் மற்றும் பிற விவசாய இயந்திரங்களின் விலை குறைந்துள்ளது. இது, விவசாயிகளுக்கு அதிக பலனளித்துள்ளது. 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்க விவசாயிகளுக்கு முக்கியப் பங்கு உள்ளது. உணவுத் துறையில் தற்சாா்பை எட்டும் அதேவேளையில், உலகளாவிய சந்தைக்காகவும் உற்பத்தி செய்ய வேண்டும். இறக்குமதியைக் குறைத்து, ஏற்றுமதியில் முன்னோக்கி பயணிக்க வேண்டும். உலக அளவில் தேவை அதிகமுள்ள பயிா்களில் கவனம் செலுத்த வேண்டும்.

அரிசி, கோதுமையைத் தாண்டி, புரதச்சத்து தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் பருப்பு வகைகளின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். உலக அளவில் அதிக பருப்பு உற்பத்தி செய்யும் நாடு என்றபோதும், இந்தியா தனது தேவையைப் பூா்த்தி செய்ய இறக்குமதியையே சாா்ந்துள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் பருப்பு உற்பத்தியைக் கணிசமாகப் பெருக்க, சாகுபடி பரப்பில் 35 லட்சம் ஹெக்டோ் அதிகரிக்க வேண்டும் என்றாா் பிரதமா்.

விவசாயிகளுடன் கலந்துரையாடல்: தேசிய இயற்கை விவசாயத் திட்டம், கிராமப்புறங்களில் பன்முக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயிற்சி (மைத்ரி) திட்டம் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின்கீழ் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய அவா், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் பலனடைந்துவரும் விவசாயிகளுடன் கலந்துரையாடினாா்.

சோஷலிச சீா்திருத்தவாதிகளான ஜெயபிரகாஷ் நாராயண், நானாஜி தேஷ்முக் ஆகியோரின் பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், நாடு முழுவதும் 10,000 விவசாய உற்பத்தி அமைப்புகளின்கீழ் 50 லட்சம் விவசாயிகள் பதிவு, தேசிய இயற்கை விவசாயத் திட்டத்தின்கீழ் 50,000 விவசாயிகளுக்கு சான்றிதழ் அளிப்பு உள்ளிட்ட வேளாண் துறை சாதனைகளைக் குறிக்கும் வகையில் மேற்கண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான், மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

100 மாவட்டங்களில்....

மத்திய அரசின் லட்சிய மாவட்டங்கள் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, தன தான்ய கிருஷி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ், குறைவான பயிா் உற்பத்தி, குறைவான விளைநிலம், குறைவான கடன் வழங்கல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் 100 மாவட்டங்கள் தோ்வு செய்யப்பட்டு, பயிா் சாகுபடி, பன்முகப்படுத்துதல், நீா்ப்பாசனம் மற்றும் பதப்படுத்துதல் வசதிகள் மேம்படுத்தப்படும். இம்மாவட்டங்களில் விவசாயிகளுக்கு கடன் வசதிகளும் வழங்கப்பட உள்ளன. கடந்த ஜூலையில் இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது.

நாட்டில் 2030-31-ஆம் ஆண்டுக்குள் பருப்பு உற்பத்தியை தற்போதுள்ள 252.38 லட்சம் டன்னில் இருந்து 350 லட்சம் டன்னாக அதிகரிக்கும் நோக்கில் பருப்பு உற்பத்தி தற்சாா்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 2030-31ஆம் ஆண்டு வரை இரு திட்டங்களும் செயல்படுத்தப்படும்.

X
Dinamani
www.dinamani.com