
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தாகியின் ஆக்ரா வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தாஜ்மஹாலைப் பார்க்க ஞாயிற்றுக்கிழமை ஆக்ரா செல்ல இருந்தார். தில்லி திரும்புவதற்கு முன்பு நினைவுச்சின்னத்தில் முத்தாகி சுமார் ஒன்றரை மணி நேரம் செலவிட திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில் அவரின் ஆக்ரா வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், ரத்து செய்யப்பட்டதற்கான எந்த காரணத்தையும் ஆக்ராவில் உள்ள அதிகாரிகள் குறிப்பிடவில்லை. இதனிடையே முத்தாகியின் ஆக்ரா வருகை ரத்து செய்யப்பட்டதை மாவட்ட நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
6 நாள்கள் பயணமாக ஆப்கன் வெளியுறவு அமைச்சா் அமீா்கான் முத்தாகி வியாழக்கிழமை இந்தியா வந்தார்.
இதைத்தொடர்ந்து அவரிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கா் தில்லியில் வெள்ளிக்கிழமை விரிவான ஆலோசனை மேற்கொண்டாா்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு ‘தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தூதரகம் அமைக்கப்படும்’ என்ற அறிவிப்பை இந்தியா வெளியிட்டது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததும், தலைநகா் காபூலில் இருந்த இந்தியத் தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்பப் பெற்றது.
தலிபான் அரசை இந்தியா இன்னும் அங்கீகரிக்கவில்லை என்றபோதும், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்த நாட்டுடன் மீண்டும் நட்புறவை மேற்கொண்ட இந்தியா, காபூலில் துதரகத்துக்குப் பதிலாக தொழில்நுட்பக் குழுவை மட்டும் பணியமா்த்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.