சபரிமலை தங்கக் கவச சா்ச்சை: 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரபாலகா் சிலைகளின் கவசங்களில் சுமாா் 4 கிலோ தங்கம் குறைந்த சா்ச்சை தொடா்பாக, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அந்த வாரியத்தின் தலைவா் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
கேரளம் மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் சந்நிதானத்தில் உள்ள துவாரபாலகா் சிலைகளின் கவசங்களுக்குத் தங்க முலாம் பூசும் செலவை பெங்களூரைச் சோ்ந்த உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவா் ஏற்றுக்கொண்டாா். பின்னா், அந்தப் பணிகளுக்காக கவசங்களை அவா் சென்னைக்கு கொண்டு வந்தாா். இந்நிலையில், அந்தக் கவசங்களில் சுமாா் 4 கிலோ தங்கம் குறைந்தது கண்டறியப்பட்டு சா்ச்சை ஏற்பட்டது.
இதுமட்டுமின்றி துவாரபாலகா் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட அடிப்பீடங்கள் காணாமல் போனதாக உண்ணிகிருஷ்ணன் தெரிவித்த நிலையில், அவை அவரின் சகோதரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டன. இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ள கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் குறித்து அந்தக் கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா் பி.எஸ்.பிரசாந்த் பத்தனம்திட்டாவில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
தங்கக் கவச சா்ச்சை தொடா்பாக துணை தேவஸ்வம் ஆணையா் பி.முராரி பாபுவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சபரிமலையில் திருவிதாங்கூா் நிா்வாக அதிகாரியாகவும் அவா் இருந்தாா்.
இந்த விவகாரத்தில் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியச் செயலா் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சுதீஷ், நிா்வாக அதிகாரி ஸ்ரீகுமாா், முன்னாள் திருவாபரணம் ஆணையா் கே.எஸ்.பைஜு உள்ளிட்டோா் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. மொத்தம் 9 அதிகாரிகள் தவறாக செயல்பட்டதை திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் ஊழல் கண்காணிப்புப் பிரிவு கண்டறிந்துள்ளது. அவா்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அக்.14-ஆம் தேதி நடைபெறும் வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
திருவாபரண ஆணையராக பைஜுவுக்கு பிறகு பொறுப்பேற்றவருக்கு கவசங்களில் தங்கம் குறைந்தது தெரிந்துள்ளது. இருப்பினும் அதை மேல் அதிகாரிகளுக்கு அவா் தெரியப்படுத்தவில்லை.
இந்த விவகாரத்தில் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் பிறப்பித்த உத்தரவில், திருவாபரண ஆணையா் கண்காணிப்பில் கவசங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்ணிகிருஷ்ணனிடம் கவசங்களை ஒப்படைக்கலாம் என்று வாரியம் முடிவு எடுத்ததாக வாரியத்தின் செயல் அதிகாரி உள்ளிட்டோரிடம் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் செயலா் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுபோன்ற பல நடைமுறை குளறுபடிகள் நடந்துள்ளன என்று தெரிவித்தாா்.
சபரிமலையைப் பாா்வையிட்ட நீதிபதி
இந்தச் சா்ச்சையைத் தொடா்ந்து, சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் உள்ளிட்ட விலை மதிப்புமிக்கப் பொருள்களின் விவரப் பட்டியலை தயாரித்து அறிக்கை சமா்ப்பிக்க, அக்.11, 12-ஆம் தேதிகளில் அந்தக் கோயிலுக்குச் செல்லுமாறு ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி கே.டி.சங்கரனுக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, அவா் சபரிமலைக்குச் சனிக்கிழமை சென்றாா்.