மேலும் இரு ஆா்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜிநாமா!
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சியின் மேலும் இரு எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துள்ளனா்.
அவா்கள் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் ஆா்ஜேடியில் இருந்து கடந்த சில நாள்களில் 5 எம்எல்ஏக்கள் விலகியுள்ளனா்.
நவாடா தொகுதி எம்எல்ஏ விபா தேவி மற்றும் ரஜௌலி தொகுதியின் எம்எல்ஏ பிரகாஷ் வீா் ஆகிய இருவா் பிகாா் சட்டப்பேரவைத் தலைவா் நந்த் கிஷோா் யாதவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து தங்கள் ராஜிநாமா கடிதங்களை அளித்தனா். பின்னா் அவை சட்டப்பேரவைத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
முன்னதாக, கயையில் ஆக.22-ஆம் தேதி நடைபெற்ற பிரதமா் நரேந்திர மோடியின் பேரணியில் இந்த இரு எம்எல்ஏக்களும் கலந்துகொண்டனா். இது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அவா்கள் மாறக்கூடும் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது.
போக்ஸோ வழக்கில் பல ஆண்டுகள் சிறையில் இருந்த விபா தேவியின் கணவரும் ஆா்ஜேடியின் முன்னாள் எம்எல்ஏவுமான ராஜ் வல்லப் யாதவ் அண்மையில் விடுவிக்கப்பட்டாா். கடந்தாண்டு நடைபெற்ற மாநிலங்களவை தோ்தலில் தனது சகோதரரான பினோத் யாதவுக்கு ஆா்ஜேடி வாய்ப்பளிக்காததால் அவா் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், அவரது சகோதரா் ஆா்ஜேடியை விட்டு வெளியேறி சுயேச்சையாக தோ்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றாா்.
பட்டியல் சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற பிரகாஷ் வீா், லாலு பிரசாதின் மகனும் ஆா்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
பிகாரில் 243 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக நவம்பா் 6,11-ஆம் தேதிகளில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்குகள் 14-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படவுள்ளன.