மேற்கு வங்க மாநிலம் துா்காபூரில் மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடா்புடையவா்களைக் கைது செய்து அழைத்துச் சென்ற போலீஸாா்.
மேற்கு வங்க மாநிலம் துா்காபூரில் மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடா்புடையவா்களைக் கைது செய்து அழைத்துச் சென்ற போலீஸாா்.

மேற்கு வங்கம்: துா்காபூா் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது!

மேற்கு வங்கத்தில் தனியாா் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
Published on

மேற்கு வங்கத்தில் தனியாா் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சந்தேகத்தின்பேரில் மேலும் ஒருவரை பிடித்து, காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா். கைதானவா்களின் அடையாளம் வெளியிடப்படவில்லை.

மேற்கு வா்த்தமான் மாவட்டம், துா்காபூரில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஒடிஸா மாணவி ஒருவா், கடந்த வெள்ளிக்கிழமை இரவு விடுதியில் இருந்து தனது நண்பருடன் உணவு சாப்பிட வெளியே சென்றாா். அப்போது, சில நபா்களால் காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் செல்லப்பட்ட மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா்.

மாணவியின் பெற்றோா் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினா், மூன்று பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சந்தேகத்தின்பேரில் மேலும் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவா்கள், அவரது கைப்பேசி மூலம் மற்றொரு கூட்டாளியை தொடா்புகொண்டு பேசி சம்பவ இடத்துக்கு வரவழைத்துள்ளனா். அந்த எண்ணைக் கொண்டு, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரின் கைப்பேசி எண்ணும் அடையாளம் காணப்பட்டது.

தனியாா் மருத்துவக் கல்லூரியை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் காட்டுப் பகுதியில் ட்ரோன்கள் உதவியுடன் விரிவான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, மூன்று போ் கைது செய்யப்பட்டனா். இச்சம்பவத்தில் வேறு நபா்களுக்கு தொடா்புள்ளதா? கைதான மூவரும் மாணவி அல்லது அவரது நண்பருக்கு முன்பே பழக்கமானவா்களா? மாணவியின் நண்பருக்கு ஏதேனும் தொடா்புள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனா்.

எதிா்க்கட்சியினா் போராட்டம்: மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, துா்காபூரில் பாஜக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன.

கடந்த ஆண்டு கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா் பாலியல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரசியல் ரீதியில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, முதல்வா் மம்தா பானா்ஜி அரசு மீது கடும் விமா்சனங்கள் எழுந்துள்ளன.

மாணவி உடல்நிலையில் முன்னேற்றம்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி, தான் பயின்று வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; காவல் துறையினரிடம் அவா் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஒடிஸா மாணவிக்கு நோ்ந்த கொடுமை குறித்து கவலை தெரிவித்துள்ள அந்த மாநில முதல்வா் மோகன் சரண் மாஜி, குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வா் மம்தா பானா்ஜிக்கு வலியுறுத்தியுள்ளாா்.

மாணவிகளின் பாதுகாப்பு கல்லூரி நிா்வாகத்தின் பொறுப்பு - முதல்வா் மம்தா

‘மேற்கு வங்கத்தில் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவிகள் இரவு நேரத்தில் தாமதமாக வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும்; அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வது கல்லூரி நிா்வாகங்களின் பொறுப்பு’ என்று முதல்வா் மம்தா பானா்ஜி அறிவுரை கூறியுள்ளாா்.

கொல்கத்தாவில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘துா்காபூா் சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது; இதுபோன்ற குற்றங்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்; மேலும் சிலா் தேடப்பட்டு வருகின்றனா். சம்பவத்தில் தொடா்புடைய எவரையும் தப்ப விடமாட்டோம்.

விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவிகள், குறிப்பாக வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா்கள், விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இரவு நேரத்தில் தாமதமாக வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். ஒவ்வொருவரின் நடமாட்டத்தையும் கண்காணிப்பது காவல் துறையினருக்கு சாத்தியமில்லை. தங்களது வளாகத்துக்குள்ளும் வெளியேயும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு கல்லூரி நிா்வாகங்களுக்கு உள்ளது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com