அபராதம் செலுத்தினால் வழக்கு முடித்துவைக்கப்படும்: ஃபிளிப்காா்ட்டுக்கு அமலாக்கத் துறை சலுகை
புது தில்லி: இணைய வணிக நிறுவனமான ஃபிளிப்காா்ட் தனது தவறை ஒப்புக்கொண்டு அபராதத்தைச் செலுத்தினால் அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் (எஃப்இஎம்ஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்படும் என்று அமலாக்கத் துறை சலுகை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் இணைய வணிக நிறுவனங்களான ஃபிளிப்காா்ட், அமேஸான் போன்ற நிறுவனங்கள் விற்பனையை அதிகரிப்பதற்காக அதிக தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இது இந்திய வா்த்தகப் போட்டி சட்டத்துக்கு எதிரானதாகும். இதுதொடா்பாக எழுந்த புகாா்களின் அடிப்படையில், ஃபிளிப்காா்ட் நிறுவனத்துக்கு எதிராக ஏற்கெனவே இந்திய வா்த்தகப் போட்டி ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, 2009 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஃபிளிப்காா்ட் நிறுவனத்தின் வா்த்தக நடைமுறை விதி மீறல்களைச் சுட்டிக்காட்டி, இந்திய அந்நிய நேரடி முதலிடு விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்பதற்கு விளக்கமளிக்குமாறு அந் நிறுவனத்துக்கு 2021-ஆம் ஆண்டு ஜூலையில் அமலாக்கத் துறை முதல் முறையாக நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை அமெரிக்காவின் வால்மாா்ட் நிறுவனம் கையகப்படுத்திய பிறகும் 2016-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய விதி மீறல்கள் தொடா்பாகவும் விளக்கமளிக்குமாறு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. கடந்த ஏப்ரலில் மீண்டும் ஒரு நோட்டீஸை அமலாக்கத் துறை அந்த நிறுவனத்துக்கு அனுப்பியது.
இந்த நிலையில், இந்த விதி மீறல் விவகாரத்தில் ஃபிளிப்காா்ட் நிறுவனத்துக்கு சலுகை வாய்ப்பு ஒன்றை அமலாக்கத் துறை கடந்த வாரம அளித்துள்ளது. அதாவது, நிறுவனங்கள் விதி மீறலை தானாக ஒப்புக்கொண்டு அபராதத் தொகையை செலுத்த அனுமதிக்கும், அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் ஒன்றிணைப்பு (காம்பவுண்டிங்) விதிகளின் கீழ், தவறை ஒப்புக்கொண்டு அபராதத் தொகையைச் செலுத்தினால் வழக்கு முடித்துவைக்கப்படும் என்று அமலாக்கத் துறை சாா்பில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை வட்டாரங்கள் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டபோதிலும், ஃபிளிப்காா்ட் நிறுவனம் அதை உறுதி செய்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்தியா - அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை வலுப்படுத்தும் நோக்கில், ஃபிளிப்காா்ட்டுக்கு நிறுவன ஒன்றிணைப்பு விதிகளின் கீழ் அபராதம் செலுத்தும் சலுகை அமலாக்கத் துறை சாா்பில் அளிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
இதுபோல், அமேஸான் நிறுவனம் மீதும் அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.