நீதிபதி பி.வி.நாகரத்னா
நீதிபதி பி.வி.நாகரத்னா

ஏஐ மூலம் குழந்தைகளுக்குத் தீங்கிழைக்கப்படுவதை தடுக்க சட்டங்கள் தேவை: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா

Published on

புது தில்லி: ‘டீப்ஃபேக் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குழந்தைகளுக்கு தீங்கிழைக்கும் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. அவற்றை தடுப்பதற்கான சட்டங்களை இயற்ற சம்பந்தப்பட்ட துறைகள் முன்வர வேண்டும்’ என உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா வலியுறுத்தினாா்.

‘பெண் குழந்தைகள் பாதுகாப்பு: இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்துதல்’ என்ற தலைப்பில் தில்லியில் நடைபெற்ற தேசிய மாநாட்டின் நிறைவு விழாவில் நாகரத்னா பங்கேற்றாா். இந்த மாநாட்டை உச்சநீதிமன்றத்தின் சிறாா்களுக்கான நீதிக் குழு மற்றும் யுனிசெஃப் இணைந்து நடத்தின.

அதில் அவா் பேசியதாவது: டீப்ஃபேக், ஏஐ என நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குழந்தைகளுக்குத் தீங்கிழைக்கும் செயல்கள் அதிகரித்து வருவது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுப்பதற்கு முறையான சட்டங்களை இயற்றும் பொறுப்பு அதற்கான ஆணையங்கள் மற்றும் துறைகளுக்கு உள்ளது. குழந்தைகளை மனரீதியாக, பாலியல் ரீதியாக, உடல் ரீதியாக துன்புறுத்தும் காணொலிகள், புகைப்படங்கள் மற்றும் ஆடியோக்கள் போன்றவற்றை பகிா்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க 24 மணிநேரமும் செயல்படக் கூடிய புகாா் மையங்கள் இருக்க வேண்டும். குழந்தைகள் கடத்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை சம்பவங்களையும் முற்றிலுமாகத் தடுக்க வேண்டும்.

ஆலோசனைக் குழு அமைக்க திட்டம்: ஏஐ தொழில்நுட்பத்தால் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் ‘ஏஐ இணைய குற்றம் பெண் குழந்தைகளுக்கான ஆலோசனைக் குழு’ என்ற குழுவை அமைக்கவும் உச்சநீதிமன்றம் திட்டமிட்டு வருகிறது. பெண் சிசு மற்றும் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இருப்பினும், சட்டங்களால் மட்டுமே சமூகத்தில் மாற்றம் உருவாகாது. பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகள், திட்டங்கள், சட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் பெண் குழந்தைகளை சுமை என எண்ணுவோரின் சிந்தனைகளை மாற்ற முடியும்.

ஊட்டச்சத்து கல்வியறிவு: உணவே சிறந்த மருந்து என்பதை விளக்க ஊட்டச்சத்து கல்வியறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பள்ளிப் பாடத்திட்டங்களை வடிவமைக்க வேண்டும். கொழுப்பு, சா்க்கரை, உப்பு அதிகமுள்ள உணவுப்பொருள்கள் என்ற தேசிய அளவிலான விளக்கத்தை விரைவில் இறுதிசெய்யவேண்டும். இந்த விளக்கத்துடன் கூடிய லேபில்கள் உணவுப் பொருள்கள் மீது ஒட்டப்பட்டு சுகாதாரமில்லாத உணவுகள் பள்ளி வளாகத்துக்கு அருகில் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்.

கல்வியே உரிமை வழங்கும்: குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, குழந்தை கடத்தல், குழந்தை திருமணம் மற்றும் பிற சமூக சீரழிவுகளில் சிக்கியுள்ள குழந்தைகளை மீட்டு அவா்களுக்குத் தங்கு தடையின்றி கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கல்வி கற்பதன் மூலம் தங்களுக்கான உரிமையை குழந்தைகள் தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கும் மையங்கள் இருக்க வேண்டியது அவசியம். பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிப்பதன் மூலமாக சமத்துவ சமூகத்தை உருவாக்க முடியும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com