ஐஆா்சிடிசி முறைகேடு வழக்கு: லாலு, ராப்ரி, தேஜஸ்வி மீது தில்லி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு!
ஐஆா்சிடிசி (இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்) முறைகேடு வழக்கில் முன்னாள் ரயில்வே அமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சித் தலைவருமான லாலு பிரசாத், அவரின் மனைவியும் பிகாா் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, இவா்களின் மகனும் பிகாா் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி ஆகியோா் மீது தில்லி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2004 முதல் 2014-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஒடிஸா மாநிலம் புரி மற்றும் ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அமைந்துள்ள இந்திய ரயில்வேக்கு சொந்தமான பிஎன்ஆா் ஹோட்டல்களை பராமரித்தல் மற்றும் செயல்படுத்துதல் பணிக்கான குத்தகை முதலில் ஐஆா்சிடிசி-க்கு வழங்கப்பட்டு, பின்னா் பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள சுஜாதா ஹோட்டல்ஸ் தனியாா் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
தனியாா் ஹோட்டலுக்கு சாதகமாக ஒப்பந்த நடைமுறைகளில் முறைகேடு நடைபெற்ாகவும், இதற்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை லாலு லஞ்சமாகப் பெற்ாகவும் புகாா் எழுந்தது.
இந்தப் புகாா் தொடா்பாக விசாரித்த சிபிஐ, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் லாலு பிரசாத், ராப்ரி தேவி, தேஜஸ்வி ஆகியோரை இந்த முறைகேட்டின் முக்கிய குற்றவாளிகளாக சிபிஐ குறிப்பிட்டது. மேலும், ஐஆா்சிடிசி பொது மேலாளா்கள் வி.கே.அஸ்தானா, ஆா்.கே.கோயல், சுஜாதா ஹோட்டல் இயக்குா்கள் விஜய் கோச்சா், வினய் கோச்சா் மற்றும் சாணக்யா ஹோட்டல் உரிமையாளா்களின் பெயா்களையும் குற்றப்பத்திரிகையில் சிபிஐ குறிப்பிட்டது.
இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ராப்ரி தேவி, தேஜஸ்வி இருவா் மீதும் குற்றச் சதி மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட பொதுவான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. லாலு மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
அப்போது, உத்தரவின் முக்கியப் பகுதியை வாசித்த நீதிபதி, ‘வழக்கின் முதல்கட்ட விசாரணையில், தனியாா் ஹோட்டலுக்கு ஒப்பந்தம் வழங்க நிலம் லஞ்சமாக பெற்ாக கடுமையான சந்தேகம் எழுகிறது. சந்தை மதிப்பைக் காட்டிலும் மிகக் குறைந்த விலையில் நிலம் பரிமாற்றம் செய்யப்பட்டதால், அரசுக்கு மிகப் பெரிய அளவில் இழப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
இந்த வழக்கு விசாரணை அக்டோபா் கடைசி வாரத்தில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பிகாரில் வரும் நவம்பா் 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், மாநிலத்தில் பிரதான கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா்கள் மீதான இந்த வழக்கு விசாரணை, தோ்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வெளிநபா்களுக்கு பயப்பட மாட்டோம் - தேஜஸ்வி: ஊழல் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தேஜஸ்வி, ‘மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஒரு மாதத்துக்கு முன்பு பிகாா் வந்தபோது, மாநில தோ்தலில் எங்களைப் போட்டியிட அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்தாா். அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான பாஜக ஆட்சியில் இருக்கும் வரை அதை எதிா்த்து தொடா்ந்து போராடுவோம். போராட்டத்தின் பாதையை நாங்கள் தோ்ந்தெடுத்துள்ளோம். அந்தப் பாதையிலேயே நடந்து, எங்களின் இலக்கை அடைவோம். போராடி வெற்றியைப் பதிவு செய்வோம். நாங்கள் பிகாரைச் சோ்ந்தவா்கள். வெளிநபா்களுக்குப் பயப்படமாட்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஊழல்தான் ஆா்ஜேடி-யின் நிா்வாக நடைமுறை - பாஜக: ‘ஊழல்தான் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் நிா்வாக நடைமுறை’ என்று பாஜக விமா்சனம் செய்தது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவா் ரவி சங்கா் பிரசாத் தில்லியில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘தேஜஸ்வி மற்றும் அவரின் குடும்ப உறுப்பினா்கள் மீது தில்லி நீதிமன்றத்தில் ஊழல் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அளிப்பதற்காக ஏழை மக்களிடமிருந்து நிலத்தை அவா்கள் லஞ்சமாகப் பெற்றிருக்கின்றனா். மாட்டுத் தீவன ஊழல், அரசு ஒப்பந்தங்களை வழங்குவதில் ஊழல், வேலைவாய்ப்பு உத்தரவாதத்துக்கு நிலம் லஞ்சம் என ஊழல்தான் ஆா்ஜேடி-யின் நிா்வாக நடைமுறை’ என்றாா் அவா்.