ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள நான்கு மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜம்மு}காஷ்மீரில் இருந்து நான்கு மாநிலங்களவை எம்.பி.க்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அம்மாநில சட்டப் பேரவையில் இடம்பெற்றுள்ள 88 எம்எல்ஏக்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாவர். தேர்தல் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
சட்டப் பேரவையில் 28 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள பாஜக ஒரு மாநிலங்களவை எம்.பி.யைத் தேர்வு செய்வதற்கான பலத்தைக் கொண்டுள்ளது.
இந்தச் சூழலில் பாஜகவைச் சேர்ந்த ஜம்மு}காஷ்மீர் பிரதேச தலைவர் சத் சர்மா, அலி முகமது மீர், ராகேஷ் மகாஜன் ஆகிய மூன்று வேட்பாளர்கள் ஸ்ரீநகரில் ஜம்மு}காஷ்மீர் சட்டப் பேரவையின் செயலாளரும் மாநிலங்களவைத் தேர்தல் அதிகாரியுமான மனோஜ்குமார் பண்டிதா முன்பு திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அப்போது மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், மாநிலங்களவை எம்.பி. குலாம் அலி கட்டானா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையடுத்து பாஜக மூத்த தலைவரும் ஜம்மு}காஷ்மீர் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுனில் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில் "நான்கு மாநிலங்களவை இடங்களில் 3 இடங்களுக்கு பாஜக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மூன்று பேரையும் வெற்றி பெறச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.
ஒமர் அப்துல்லா கருத்து:
மாநிலங்களவைத் தேர்தல் குறித்து ஜம்மு}காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கருத்து தெரிவிக்கையில் "இந்தத் தேர்தல் பாஜகவின் ஆதரவாளர் யார் என்பதையும் பாஜகவின் எதிரி யார் என்பதையும் அம்பலப்படுத்தும். கடந்த ஓராண்டாக பாஜகவுக்கு ஒரே ஒரு கட்சி கூட ஆதரவு தெரிவிக்கவில்லை. அக்கட்சியால் தனது சொந்த பலத்தில் ஒரு மாநிலங்களவை இடத்தைக் கூட வெல்ல முடியாது. மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பாஜகவால் வெற்றி பெற முடிந்தால் அது பணபலம் மற்றும் அதிகாரபலத்தால் நடந்ததாகவே இருக்கும். இத்தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் நாங்கள் மூன்று இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம்' என்றார்.
காங்கிரஸ் கருத்து: இத்தேர்தல் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் அகமது மீர் கருத்து தெரிவிக்கையில் "மாநிலங்களவைத் தேர்தலுக்கான தனது வேட்பாளர்களை இறுதிசெய்வதற்கு முன் தேசிய மாநாட்டுக் கட்சி, ஒத்த கருத்துடைய கட்சிகளைக் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் நம்பிக்கையைப் பெற்று முதல்வர் செயல்பட்டிருக்க வேண்டும். பாஜகவைச் சேராத எம்எல்ஏ யாரும் அக்கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.