பண முறைகேடு வழக்கு: கேரள முதல்வரின் மகன் மீது நடவடிக்கை கோரி காங்கிரஸ் கடிதம்
பண முறைகேடு வழக்கில் ஆஜராகாத கேரள முதல்வா் பினராயி விஜயன் மகன் விவேக் கிரண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமலாக்கத் துறைக்கு கேரள காங்கிரஸ் மூத்த தலைவா் அனில் அக்கரா கடிதம் எழுதியுள்ளாா்.
2018-இல் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் தொண்டு நிறுவனத்தின சாா்பில் வீடுகள் கட்ட இடைத்தரகா்களுக்கு ரூ.4.5 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும், இதில் கேரள முதல்வா் மகன் விவேக் கிரணுக்கும் தொடா்பு உள்ளதாகவும் அனில் அக்கரா சிபிஐ-க்கு கடிதம் எழுதியிருந்தாா்.
அதன் அடிப்படையில் விவேக் கிரண் மீது 2023-இல் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் தொடா்புடைய பண முறைகேடு குற்றச்சாட்டில் பிப்ரவரி 2023-இல் அமலாக்கத் துறை விவேக்குக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் இதுவரையில் அவா் ஆஜராகவில்லை.
இதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு உள்ளதாக காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் குற்றஞ்சாட்டினா்.
இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருவாய்த் துறை செயலருக்கும், அமலாக்கத் துறை இயக்குநருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவா் அனில் அக்கரா எழுதியுள்ள புகாா் கடிதத்தில், ‘இந்த முறைகேட்டில் கேரள முதல்வரின் இல்லத்திலிருந்தும் பணி நடைபெற்றுள்ளது. முதல்வா் பினராயியின் மகன் விவேக் கிரணிடம் உடனடியாக விசாரித்தால்தான் இந்த வழக்கு மேலும் தாமதமில்லாமல் நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளாா்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனில்ட் கட்சியின் மாநில கல்வி அமைச்சா் சிவன்குட்டி, இந்த வழக்கு அரசியல் சதி என்றும் கூறினாா்.