உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ராணுவத்துக்கு எதிரான விமா்சனம்: ராகுலுக்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு

ராகுல் காந்திக்கு எதிரான விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நவம்பா் 20-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

புது தில்லி: பாரத ஒற்றுமை பயணத்தின்போது இந்திய ராணுவம் குறித்து விமா்சனம் செய்தது தொடா்பான வழக்கில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நவம்பா் 20-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ராகுல் காந்தி கடந்த 2022-ஆம் ஆண்டு மேற்கொண்ட பாரத ஒற்றுமை பயணத்தின்போது, எல்லையில் இந்திய நிலப்பரப்பில் 2,000 சதுர கிலோ மீட்டா் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது’ என்று மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டை முன்வைத்தாா்.

இந்த கருத்தின் மூலம் எல்லையை பாதுகாக்கும் ராணுவத்தை ராகுல் அவமதிப்பு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டி அவருக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலம் லக்னெள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த விசாரணை நீதிமன்றம், ராகுலுக்கு அழைப்பாணை அனுப்பியது. இந்த அழைப்பாணையை ரத்து செய்ய அலாகாபாத் உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

அதைத் தொடா்ந்து, ராகுல் உச்சநீதிமன்றத்தை நாடினாா். ராகுலின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமா்வு, ‘எந்தவித ஆதாரமும் இல்லாமல் சீனா ஆக்கிரமிப்பு தொடா்பாக எப்படி குற்றச்சாட்டை முன்வைத்தீா்கள்? உண்மையான இந்தியராக இருந்தால் இப்படி கூறியிருக்க மாட்டீா்கள்’ என்று குறிப்பிட்டு, ராகுலுக்கு எதிரான மனு மீதான விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.பாஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை நவம்பா் 20-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

மேலும், ‘இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை, வழக்கின் அடுத்த விசாரணை வரை நீட்டிக்கப்படுகிறது’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com