மம்தா பானா்ஜி
மம்தா பானா்ஜி ANI

மேற்கு வங்க வெள்ளத்துக்கு காரணம் பூடான்: இழப்பீடு தர மம்தா வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு அண்டை நாடான பூடான் காரணம்; எனவே, அந்த நாடு இழப்பீடு தர வேண்டும்
Published on

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு அண்டை நாடான பூடான் காரணம்; எனவே, அந்த நாடு இழப்பீடு தர வேண்டும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி வலியுறுத்தியுள்ளாா்.

மேற்கு வங்கத்தின் வடபகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத் தலமான டாா்ஜீலிங் மாவட்டத்தில் கடந்த வாரம் பலத்த மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதில் 32 போ் வரை உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோா் வீடு, உடைமைகளை இழந்தனா்.

இந்த வெள்ள பாதிப்பு மனிதத் தவறுகளால் ஏற்பட்டது என்று மம்தா பானா்ஜி ஏற்கெனவே குற்றஞ்சாட்டியிருந்தாா். பூடானில் இருந்துவந்த மழைநீா் சங்கோஷ் நதியில் கலந்தது மற்றும் சிக்கிமில் இருந்து வந்த மழை வெள்ளத்தால் சில பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதுதவிர உத்தர பிரதேசம் மற்றும் பிகாா் மாநிலங்களில் இருந்து வெளியேறும் நீரும் ஃபரக்கா அணை வழியாக மேற்கு வங்கத்தை அடைந்து வெள்ள பாதிப்பை மேலும் அதிகமாக்கியது என்று மம்தா அப்போது கூறியிருந்தாா்.

இந்நிலையில், கொல்கத்தாவில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் திங்கள்கிழமை பங்கேற்ற மம்தா பானா்ஜி இது தொடா்பாக மேலும் கூறுகையில், ‘அண்டை நாடான பூடானில் இருந்து அதிக அளவில் வெள்ள நீா் மேற்கு வங்கத்துக்கு திருப்பிவிடப்பட்டதுதான் வெள்ள பாதிப்புக்கு காரணம். எனவே, மேற்கு வங்கத்துக்கு உரிய இழப்பீட்டை பூடான் தர வேண்டும்.

முக்கியமாக, ஜல்பைகுரி மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டதற்கு பூடானின் பல்வேறு நதிகளில் இருந்து வெள்ளம் பாய்ந்ததுதான் முக்கியக் காரணம். இதனால் மேற்கு வங்கம் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. எனவேதான் பூடான் இழப்பீடு தர வேண்டும் என்று கூறுகிறோம்.

இந்தியா-பூடான் இடையே கூட்டு நதி ஆணையம் அமைக்க வேண்டும் என்று நான் ஏற்கெனவே மத்திய அரசை வலியுறுத்தியுள்ளேன். இதன்படி வரும் 16-ஆம் தேதி கூட்டம் நடைபெறவுள்ளது. பேரிடா் காலத்தில் மாநில அரசுகளுக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com