ராஜஸ்தான் பேருந்தில் தீ: 20 பேர் கருகி உயிரிழப்பு

ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூர் நோக்கி செவ்வாய்க்கிழமை சென்ற தனியார் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்த பேருந்து.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்த பேருந்து.
Published on
Updated on
1 min read

ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூர் நோக்கி செவ்வாய்க்கிழமை சென்ற தனியார் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்; 16 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து ஜெய்சால்மர் காவல் துறையினர் கூறுகையில், "குளிர்சாதன படுக்கை வசதியுடன் கூடிய தனியார் பேருந்து ஜெய்சால்மரில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு 57 பயணிகளுடன் புறப்பட்டது. ஜெய்சால்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்தின் பின் பக்கத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை அறிந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தினார். ஆனால் சில விநாடிகளில் பேருந்து முழுவதும் தீ பரவியது. இதனால் பேருந்தைச் சுற்றி கடும் புகைமூட்டம் ஏற்பட்டது.

தீ விபத்தை அறிந்த உள்ளூர் மக்களும், அருகே உள்ள ராணுவ முகாமில் இருந்த ராணுவ வீரர்களும் விரைந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், ஜெய்சால்மர் மாவட்ட நிர்வாகத்தினர் வந்து அவர்களுடன் மீட்புப் பணியை மேற்கொண்டனர்.

இந்த தீ விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 16 பேருக்கு ஜோத்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும்படி அவர்களது உறவினர்களுக்கு ஜெய்சால்மர் மாவட்ட நிர்வாகம் தகவல் அனுப்பியது. இதற்கான உதவி எண்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களை உறவினர்கள் அடையாளம் கண்டவுடன் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டு உடல்களை ஒப்படைக்கப்படவுள்ளன.

விபத்துக்கான காரணம் குறித்த முழு தகவல்கள் தற்போதுவரை தெரியாத நிலையில், பேருந்தில் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பற்றி இருக்க வாய்ப்புள்ளதாக காவல் துறையினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

முதல்வர் இரங்கல்: விபத்து நிகழ்ந்த பகுதியை ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா பார்வையிட்டார். இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இந்தச் சம்பவம் வேதனையளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் ஹரிபாவ் பகாடே, முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தனர்.

பிரதமர் இரங்கல்: பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஜெய்சால்மர் பேருந்து விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி கவலையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும்' என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com