
"ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையால் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் தலைமை அலுவலகங்கள், பயிற்சி மையங்கள் ஆகியவை தகர்க்கப்பட்டதால் பயங்கரவாதிகளுக்கு இனி பாதுகாப்பான இடமே இல்லை என்ற நிலை தோன்றியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஹரியாணா மாநிலம், மானேசர் நகரில் என்எஸ்ஜி படைப்பிரிவின் கருப்புப் பூனை கமாண்டோ பிரிவின் தலைமையகத்தில் 41-ஆவது நிறுவன தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் தலைமை அலுவலகங்கள், பயிற்சி மையங்கள், பதுங்குமிடங்கள் ஆகியவை தகர்க்கப்பட்டதை "ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை உறுதிப்படுத்தியது. பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட "ஆபரேஷன் மஹாதேவ்' நடவடிக்கையை நமது பாதுகாப்புப் படையினர் எடுத்தனர். பாதுகாப்புப் படையினர் மீதான நமது குடிமக்களின் நம்பிக்கையை இந்த நடவடிக்கை வலுப்படுத்தியது.
பிரதமர் மோடி தலைமையின் கீழ் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்வதில்லை என்ற கொள்கையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த 370-ஆவது சட்டப் பிரிவை நீக்கியது, துல்லியத் தாக்குதல், வான்வழித் தாக்குதல், "ஆபரேஷன் சிந்தூர்' என பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுத்துவந்துள்ள நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்த்தால் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் வேர்களை பாதுகாப்புப் படையினர் தகர்த்துள்ளது தெரியவரும்.
"ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு பயங்கரவாதிகள் எங்கு பதுங்கி இருந்தாலும் அவர்களுக்கு இனி பாதுகாப்பான இடமே இல்லை என்ற நிலையை பாதுகாப்புப் படையினர் ஏற்படுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு பயங்கரவாதச் செயலுக்கும் பதிலடி தர பூமியின் எந்த மூலைக்கும் செல்வதற்கு நமது படைவீரர்கள் உறுதிபூண்டுள்ளனர்.
பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைக் காப்பதற்காக மத்திய அரசு கடந்த 2019 முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், தேசிய புலனாய்வு அமைப்பு சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளிப்பதை விசாரிக்க சட்டவிரோத பணப் பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை அமலாக்கப் பிரிவு தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது ஆகிய நடவடிக்கைகள் அதில் அடங்கும்.
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளிக்கப்படுவது குறித்து புலன்விசாரணை நடத்த ஒரு கட்டமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பயங்கரவாத அமைப்புகள் குறித்து உளவுத் தகவல்களை சேகரிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் பல்நோக்கு மையம் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் 57 தனிநபர்களையும் பல்வேறு அமைப்புகளையும் சட்டவிரோதம் என்று நாங்கள் அறிவித்துள்ளோம். நாட்டில் பல ஆண்டுகளாக அமைப்புரீதியான குற்றங்களுக்கும், பயங்கரவாதத்துக்கும் எதிராக என்எஸ்ஜி படை போரிட்டு வந்துள்ளது. கடந்த 1984-ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு தாக்குதல்களில் இருந்து நாட்டை என்எஸ்ஜி படை காத்து வருகிறது. "ஆபரேஷன் அஸ்வமேதம்', "ஆபரேஷன் வஜ்ர சக்தி', "ஆபரேஷன் தங்கு சுரக்ஷா' ஆகிய நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
என்எஸ்ஜி படையின் வீரதீரத்தைப் பார்த்து தேசம் பாதுகாப்பான கரங்களில் இருப்பதாக ஒவ்வொரு குடிமகனும் உணர்வது குறிப்பிடத்தக்கது. இப்படையின் வீரத்தில் ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கிறது.
இப்படையின் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன் என்றார் அமித் ஷா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.