
பிகார் சட்டப் பேரவைத் தேர்தலுக்காக 71 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக வெளியிட்டதாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
243 இடங்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது, நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, சிவானில் மங்கல் பாண்டே, கதிஹாரில் தர்கிஷோர் பிரசாத், டானாபூருக்கு ராம்கிரிபால் யாதவ், பங்கிபூருக்கு நிதின் நபின், பெட்டியாவுக்கு ரேணு தேவி, கயா நகரில் பிரேம் குமார், ஜமுய்க்கு ஷ்ரேயாசி சிங், லக்கிசராய்க்கு துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா, தாராபூருக்கு துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி உள்ளிட்டோரை மத்திய தேர்தல் குழு அங்கீகரித்தது.
இந்தப் பட்டியலில் 9 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் 2 துணை முதல்வர்கள், அமைச்சர்கள் 6 பேரின் பெயர்களும் உள்ளன. ஓபிசி பிரிவைச் சேர்ந்த 11 பேருக்கும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 6 பேருக்கும் பாஜக வாய்ப்பளித்துள்ளது.
இந்த தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள தொகுதிகளுக்கு விரைவில் வேட்பளார்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை முன்னதாக, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரவிருக்கும் பிகார் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு ஏற்பாட்டை அறிவித்தது, பாஜக மற்றும் ஜேடியு தலா 101 இடங்களிலும், எல்ஜேபி (ராம் விலாஸ்) 29 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 6 இடங்களிலும், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா 6 இடங்களிலும் போட்டியிடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.