மேற்கு வங்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 5 பேர், மாணவியின் நண்பர் ஆகியோரிடம் காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் மேற்கு வர்த்தமான் மாவட்டம் துர்காபூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில், ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்த மாணவி தனது நண்பருடன் உணவு சாப்பிட சென்றுவிட்டு கல்லூரி வளாகத்துக்குத் திரும்பினார். அந்த மாணவியை அவரின் நண்பர் விட்டுச் சென்றபோது, அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு மாணவியை இழுத்துச் சென்று சிலர் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ள காவல் துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது: பாலியல் வன்கொடுமை சம்பவ விசாரணையின் ஒரு பகுதியாக, அந்த சம்பவம் எப்படி நடைபெற்றது என்பதை நிகழ்த்திக் காட்டவும், அதைக் காணொலியாகப் பதிவு செய்யவும் கைது செய்யப்பட்ட 5 பேர், மாணவியின் நண்பர் ஆகியோரை சம்பவம் நிகழ்ந்த இடத்துக்குக் காவல் துறை செவ்வாய்க்கிழமை அழைத்துச் சென்றது.
அந்தக் காணொலியுடன் மாணவி, அவரின் நண்பர், கைது செய்யப்பட்ட 5 பேர் ஆகியோர் அளித்த வாக்குமூலம் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். சம்பவம் நிகழ்ந்த இடத்துக்குச் செல்லும் முன், மாணவியின் நண்பரிடம் சுமார் அரை மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்றார்.
மிளகாய் பொடி விநியோகித்து பாஜக போராட்டம்: மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து மாநிலத்தில் உள்ள சால்ட் லேக் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மெட்ரோ ரயில் பெண் பயணிகளிடம் சிவப்பு மிளகாய் பொடியை பாஜக மகளிர் அணியினர் வழங்கினர். பெண் பயணிகளின் தற்காப்புக்காக மிளகாய் பொடியை வழங்கியதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
ஒடிஸா முதல்வரிடம் மாணவி கோரிக்கை: மேற்கு வங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி, அவரின் தாய், ஒடிஸா மாநில பெண்கள் ஆணையத் தலைவர் ஷோவனா மோஹந்தி ஆகியோரிடம் ஒடிஸா முதல்வர் மோகன் சரண் மாஜீ தொலைபேசியில் திங்கள்கிழமை பேசினார். அப்போது மாணவிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் உறுதியளித்தார்.
உரையாடலின்போது, ஒடிஸாவில் உள்ள ஏதேனும் ஒரு மருத்துவக் கல்லூரியில் தான் சேர உதவ வேண்டும் என்று முதல்வரிடம் மாணவி கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக முதல்வர் மாஜீ தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.