மங்கோலியாவின் வளர்ச்சிக்கு இந்தியா வலுவான பங்களிப்பு: பிரதமர் மோடி

மங்கோலியாவின் வளர்ச்சியில் நம்பிக்கைக்குரிய மற்றும் வலுவான பங்களிப்பை நல்கும் நாடாக விளங்குகிறது இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்த மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னா.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்த மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னா.
Published on
Updated on
2 min read

மங்கோலியாவின் வளர்ச்சியில் நம்பிக்கைக்குரிய மற்றும் வலுவான பங்களிப்பை நல்கும் நாடாக விளங்குகிறது இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தில்லியில் மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னாவுடன் செவ்வாய்க்கிழமை நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

ரஷியா, சீனாவை எல்லைகளாகக் கொண்ட கிழக்காசிய நாடான மங்கோலியாவின் அதிபர் குரேல்சுக் உக்னா, நான்கு நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை வந்தார். கடந்த 2021-இல் அதிபராகப் பதவியேற்ற இவர், இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

தில்லியில் பிரதமர் மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்த அதிபர் உக்னா, இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பாதுகாப்பு, எரிசக்தி, சுரங்கம், தகவல் தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம், கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இருதரப்பு நலன் சார்ந்த பிராந்திய-சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதித்தனர்.

ஒப்பந்தங்கள் கையொப்பம்: மனிதாபிமான உதவி, மங்கோலியாவில் பாரம்பரியத் தளங்கள் மீட்டெடுப்பு, குடிப்பெயர்வு, புவியியல்-கனிம வளங்கள் மற்றும் எண்மத் தீர்வுகள் பகிர்வில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

பின்னர், செய்தியாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியாவும், மங்கோலியாவும் எல்லையைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றபோதிலும், மங்கோலியாவை அண்டை நாடாகவே இந்தியா பார்க்கிறது. அந்நாட்டின் வளர்ச்சியில் நம்பிக்கைக்குரிய, உறுதியான பங்களிப்பை நல்கும் நாடாக இந்தியா உள்ளது. நமது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு, வெறும் தூதரக ரீதியிலானது மட்டுமல்ல; அது ஆன்மிகப் பிணைப்பாகும்.

ஆன்மிக சகோதர நாடுகள்: நூற்றாண்டுகளாக பௌத்த மதக் கோட்பாடுகளால் இரு நாடுகளும் பிணைக்கப்பட்டுள்ளன. எனவேதான், நம்மை ஆன்மிக சகோதர நாடுகள் என அழைக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இருதரப்பு உறவுகள் பெரும் பாய்ச்சலைக் கண்டுள்ளன.

குறிப்பாக, பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. மங்கோலிய எல்லைப் பாதுகாப்புப் படையினருக்காக இந்தியா விரைவில் திறன் கட்டமைப்புத் திட்டத்தைத் தொடங்கவுள்ளது.

சர்வதேச விவகாரங்களில் இந்தியா-மங்கோலியாவின் நிலைப்பாடு, பகிரப்பட்ட மாண்புகளின் அடிப்படையிலானது. எனவேதான், சர்வதேச தளங்களில் நெருங்கிய கூட்டாளிகளாக செயல்படுகிறோம். சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்ட இந்திய-பசிபிக் பிராந்தியத்தை விரும்புகிறோம். தெற்குலகின் குரலாக ஒன்றுபட்டு ஒலிப்போம் என்றார் பிரதமர் மோடி.

குடியரசு துணைத் தலைவருடன் சந்திப்பு: தில்லியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னா சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு உறவின் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இருவரும் ஆலோசித்தனர். நாடாளுமன்ற வளாகத்தைப் பார்வையிட்ட மங்கோலிய அதிபர் மற்றும் அந்நாட்டுக் குழுவினர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவையும் சந்தித்துப் பேசினர்.

இந்தியா-மங்கோலியா இடையிலான தூதரக உறவுகள் கடந்த 1955-இல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இலவச இணையவழி விசா

"இருதரப்பு மக்கள் ரீதியிலான தொடர்பை ஊக்குவிக்கும் வகையில், மங்கோலியப் பயணிகளுக்கு இந்தியா இலவசமாக இணையவழி விசா (நுழைவு இசைவு) வழங்கவுள்ளது.

இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகம், மங்கோலியாவின் கண்டன் பௌத்த மடாலயம் இடையிலான வரலாற்றுத் தொடர்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பௌத்த மத நூல்களின் விரிவான ஆய்வுக்காக, கண்டன் மடாலயத்துக்கு சம்ஸ்கிருத ஆசிரியரை இந்தியா விரைவில் அனுப்பும். 1.7 பில்லியன் டாலர் இந்திய கடனுதவியில் மங்கோலியாவில் கட்டமைக்கப்பட்டுவரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அந்நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு புதிய வலுசேர்க்கும். இருதரப்பு உறவின் அடையாளச் சின்னமாக விளங்கும்.

2,500-க்கும் மேற்பட்ட இந்தியப் பணியாளர்கள் இத்திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளில் இந்தியாவால் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் இது மிகப் பெரியது' என்றார் பிரதமர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com