அமெரிக்காவுக்கு நிறுத்தப்பட்ட அனைத்து அஞ்சல் சேவைகளும் புதன்கிழமை (அக்.15) முதல் மீண்டும் தொடங்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
மேலும், அரசு அஞ்சல் சேவைக்கு கூடுதலாக எந்தவித வரியும் விதிக்கப்படவில்லை என்பதால் முன்பு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்தான் தற்போதும் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரியை விதித்ததையடுத்து, அந்நாட்டுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் நிறுத்துவதாக கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி அஞ்சல் துறை அறிவித்தது.
இந்நிலையில், அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, இந்தியாவிலிருந்து வரும் அஞ்சல்களின் அறிவிக்கப்பட்ட மதிப்பிலிருந்து 50 சதவீதம் தொகை சுங்க வரியாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அக்.15-ஆம் தேதிமுதல் அமெரிக்காவுக்கு அனைத்து விதமான அஞ்சல் சேவைகளும் தொடங்கப்படும் என்றும் இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
மேலும், "அமெரிக்க அரசு அறிவித்த உள்நாட்டு வரியை அமல்படுத்த ஏதுவாக அஞ்சல் சேவையை நிறுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தனியார் அஞ்சல் சேவை (கொரியர்) மற்றும் வர்த்தக சரக்குகளுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரி, அரசு அஞ்சல் சேவைக்கு விதிக்கப்படவில்லை.
ஆகையால், முன்பு வசூலிக்கப்பட்ட கட்டணத்திலேயே அரசு அஞ்சல் சேவை மீண்டும் தொடங்கப்படும். இது இந்தியாவின் ஏற்றுமதியை அரசு அஞ்சல் துறையின் மூலம் மேம்படுத்த உதவும்' என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.