
கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும், இந்தியர்கள் சைபர் மோசடியாளர்கள் மற்றும் சைபர் குற்றவாளிகளிடம் ரூ.22,842 கோடியை இழந்துள்ளனர் என்று தில்லியை மையமாகக் கொண்டு இயங்கும் ஊடக மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இப்படியிருக்க, இந்த ஆண்டில் இந்தியர்கள் கிட்டத்தட்ட ரூ.1.2 லட்சம் கோடியை சைபர் மோசடிகளில் இழப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக நடந்த சைபர் குற்றங்களில் மோசடி செய்யப்பட்ட தொகை, அதற்கு முந்தைய ஆண்டைக் காடடிலும் மூன்று மடங்கு அதிகம். 2023ஆம் ஆண்டில் சைபர் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.7,465 கோடி. ஆனால், அதுவே, 2022ஆம் ஆண்டிக் காட்டிலும் 10 மடங்கு அதிகம். அந்த ஆண்டு மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.2,306 கோடி.
சைபர் குற்ற வரையறைகள் : இந்தியாவில் அதிகரிக்கும் ஆன்லைன் நிதி மோசடி மற்றும் டீப்ஃபேக் என்ற தலைப்பில் வெளியான ஆய்வுகளில், நாடு முழுவதும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் 20 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு 15.6 லட்சமாக இருந்தது.
சைபர் மோசடி செய்யும் தொகையும், வழக்குகளும் அதிகரித்திருப்பது, நாட்டில் டிஜிட்டல் மோசடியாளர்கள் அதிக புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்பதையும் கிட்டத்தட்ட 2.90 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாகவும், தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதையும்தான் அடிப்படைக் காரணமாகக் கொண்டிருக்கிறது.
டிஜிட்டல் மோசடி அதிகரிக்கக் காரணம்?
நாடு முழுவதும் ஒரு 10 ரூபாய் தேநீர் குடித்தாலும் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்வது அதிகரித்திருப்பது போல, அதனைக் கொண்டு மோசடிகளும் அதிகரிக்கின்றன.
கடந்த ஜூன் மாதத்தில் 190 லட்சம் யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதில் 24.03 லட்சம் கோடி மதிப்பிலான பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஊரக மற்றும் கிராமப் பகுதிகளிலும் கூட, ஏராளமான மக்கள் செல்போன் மூலம் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுவதில்லை.
அதில்லாமல், நகரப் பகுதிகளில் நன்கு படித்து, பதவியில் இருந்தவர்களே, சைபர் மோசடியாளர்களின் நஞ்சகப் பேச்சுக்கு இரையாகும்போது, கிராமப் பகுதிகளில் வாழும் சாதாரண மக்கள் எம்மாத்திரம்.
புதுப்புது யோசனை
ஒரு மோசடி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குள், புதிய மோசடியை மோசடியாளர்கள் கண்டுபிடித்துவிடுகிறார்கள். மின் கட்டணம் செலுத்தவில்லை, கல்வி உதவித் தொகை, சலுகை விலையில் பொருள்கள். பரிசுச் சீட்டு என நாள்தோறும் புதுப்புது முறையில் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
ஓடிபியைப் பகிர வேண்டாம் என்றால், ஓடிபியை திருடும் செயலியை பதிவிறக்கம் செய்ய வைக்கிறார்கள். ஒரு தொலைபேசி அழைப்பின் வழியே, செல்போனையே ஹேக் செய்ய முடியும் என்கிறது தரவுகள். இப்படியிருக்க, டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, பாதுகாப்பான டிஜிட்டல் பணப்பரிமாற்றம் என்பதையும் நோக்கி நாம் நகர வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.