
மேற்கு வங்கத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், துர்காபூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்ட சம்பவத்தில், மருத்துவமனை சிகிச்சையின்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், ``அவர்களின் வாகனத்திலிருந்து எங்களை நோக்கி வருவதை நானும் என் நண்பரும் கண்டோம். நாங்கள் காட்டை நோக்கி ஓடினோம். எங்களைத் துரத்திய மூன்று பேர், என்னைப் பிடித்து, காட்டுக்குள் இழுத்துச் சென்றனர்.
அவர்கள் என் மொபைல் போனை பறித்ததுடன், என் நண்பரையும் வரவழைக்கச் சொன்னார்கள். ஆனால், என் நண்பர் வரவில்லை. நான் சப்தமிட்டால், மேலும் வேறு சிலரை வரவழைத்து விடுவதாக அச்சுறுத்தினர்’’ என்று தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தின் துர்காபூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஒடிஸாவை சேர்ந்த மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு (அக். 10) தனது ஆண்நண்பருடன் கல்லூரி வளாகத்தைவிட்டு வெளியே சென்றார்.
இந்த நிலையில், கல்லூரி வாயில் அருகே அவர்கள் இருவரையும் சிலர் வழிமறித்தவுடன், மாணவியுடன் வந்த ஆண்நண்பர் தப்பியோடி விட்டார்.
இதனைத் தொடர்ந்து, மாணவியை அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் சென்ற கும்பல், அவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்த காவல்துறையினர், மேலும் அடுத்தகட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கல்லூரியின் முன்னாள் காவலர், ஒருவர் மருத்துவமனை ஊழியர், ஒருவர் கூலி வேலைபார்ப்பவர், ஒருவர் வேலையில்லாதவர் என்று தெரிய வந்தது.
பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை, ``மேற்கு வங்க முதல்வரும் (மமதா பானர்ஜி) ஒரு பெண்தான். ஆனால், அவர் ஏன் இவ்வாறு பொறுப்பில்லாமல் பேசுகிறார்? பெண்களின் வேலையை விட்டுவிட்டு, அவர்களை வீட்டுக்குள் இருக்கச் சொல்கிறாரா?
மேற்கு வங்கம், ஔரங்கசீபின் ஆட்சியின்கீழ் இருப்பதுபோல தோன்றுகிறது. நான் என் மகளை ஒடிஸாவுக்கே அழைத்துச் செல்கிறேன். அவளது வாழ்க்கைதான் முக்கியம், பிறகுதான் படிப்பு’’ என்று கூறினார்.
இதனிடையே, ``மாணவிகள் ஏன் இரவில் வெளியில் வரவேண்டும்? அவர்களை இரவில் வெளியில் செல்ல கல்லூரி அனுமதிக்கக் கூடாது’’ என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: கேரளம்: மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை! கிறிஸ்தவ பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.