மருந்து தரப் பரிசோதனையை வலுப்படுத்த புதிய சட்டம்: மத்திய அரசு திட்டம்

மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அழகுசாதன பொருள்களின் தரப் பரிசோதனை மற்றும் சந்தைக் கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மருந்து
மருந்துகோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அழகுசாதன பொருள்களின் தரப் பரிசோதனை மற்றும் சந்தைக் கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் ஆபத்தான ரசாயனம் கலந்த இருமல் மருந்தை உட்கொண்ட 24 குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

"மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அழகுசாதன பொருள்கள் சட்டம் 2025' என்ற தலைப்பிலான இந்தச் சட்ட வரைவை வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தலைமையில் தில்லியில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்தச் சட்ட முன்வரைவை இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி (டிசிஜிஐ) மருத்துவர் ராஜீவ் ரகுவன்ஷி சமர்ப்பித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சட்ட முன்வரைவு சட்டமாக அமலுக்கு வந்தால், தரமற்ற மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைத் தயாரித்த நிறுவனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் புதிய சட்டத்தின் கீழ் முதல் முறையாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு (சிடிஎஸ்சிஓ) வழங்கப்பட உள்ளது.

மருந்து நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கலை எண்மமயமாக்கல், மாநில அளவிலான மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை விரிவுபடுத்துவது, மருந்துகள் தரப் பரிசோதனை ஆய்வகங்களின் தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளும் இந்தப் புதிய சட்டத்தில் இடம்பெற உள்ளன.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள "மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருள்கள் சட்டம் 1940' என்ற சட்டத்துக்கு மாற்றாகவும், சர்வதேச தரத்துக்கு இணையாகவும் இந்தப் புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com