கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க முறைகேடு வழக்குத் தொடர்பாக சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரபல நகைக் கடையில் கேரள சிறப்பு புலனாய்வுக் குழுவினர் புதன்கிழமை விசாரணை செய்தனர்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 2 துவார பாலகர் சிலைகள், பீடங்கள், கூரைகள் ஆகியவற்றுக்கு தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் கடந்த 1998-ஆம் ஆண்டு பொருத்தப்பட்டன. இந்த நிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்களின் எடை 4.5 கிலோ குறைந்திருப்பதாக அண்மையில் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக கடந்த செப்.17-ஆம் தேதி கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. விசாரணையின்போது தங்க முலாம் பூசப்பட்ட பீடத்தைத் தேடி கண்டுபிடிக்க ஐயப்பன் கோயில் தேவசம் போர்டு ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, தேவசம் போர்டு நடத்திய விசாரணையில், தங்க முலாம் பூசப்பட்ட பீடம் மீட்கப்பட்டது. உயர்நீதிமன்ற விசாணையில் துவார பாலகர் சிலைகளின் தங்க முலாம் காணாமல் போயிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், 4 கிலோ தங்க முலாம் காணாமல் போயிருப்பதும் தெரியவந்தது.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், அவற்றை செய்து கொடுத்த சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரபல நகைக் கடையில் விசாரணை மேற்கொள்ள கேரள சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஆய்வாளர் அனிஸ் தலைமையில் புதன்கிழமை வந்தனர். அங்கு அவர்கள் விசாரணை செய்தனர். இதில் வழக்குத் தொடர்பான பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.