
"வந்தே பாரத்' ரயில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது; தொழில்நுட்பரீதியாக அந்த ரயில் உலகின் சிறந்த ரயில்களின் வரிசையில் உள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
தில்லி பாரத மண்டபத்தில் சர்வதேச ரயில்வே கருவிகள் கண்காட்சியை அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தொடங்கி வைத்தார். ரயில்வே அமைச்சகம், இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) இணைந்து நடத்தும் இந்த கண்காட்சியில் ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், கொரியா, ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா
உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த 450 நிறுவனங்கள் பங்கேற்றன.
உலகின் இரண்டாவது பெரிய, ஆசியாவின் மிகப்பெரிய ரயில்வே கண்காட்சியான இதன் மூலம் சர்வதேச அளவில் ரயில்வே ஒத்துழைப்பு, புத்தாக்கம், முதலீடு, உள்கட்டமைப்பு சார்ந்த தொழில்நுட்பங்கள் மேம்பட வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: சர்வதேச அளவில் ரயில்வே தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறும் நாடாக இந்தியா உள்ளது. முக்கியமாக ரயில் என்ஜின் தொழில்நுட்பத்தில் இந்தியா சிறந்து விளங்குகிறது. 2024-25-இல் இந்தியாவில் 7,000 ரயில் பெட்டிகள், 42,000 சரக்கு பெட்டிகள், 1,681 ரயில் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சம் 350 கி.மீ. வேகம் வரை செல்லும் பிரத்யேக ரயில் பாதைகள் அமைக்கும் திட்டமுள்ளது. இந்த ரயில் வழித் தடம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படும்.
வந்தே பாரத் ரயில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தொழில்நுட்பரீதியில் சர்வதேச அளவில் சிறந்த ரயில்களில் ஒன்றாகவும் உள்ளது. 2,400 கிலோவாட் திறனுள்ள ஹைட்ரஜன் ரயில் முழுவதும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது ரயில்வே துறையில் இந்தியாவின் தற்சார்புக்கு முக்கிய மைல்கல்லாகும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.