
முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் பிறந்த தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
அவரது உருவப் படத்துக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு மரியாதை செலுத்தினார். குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அவரை நினைவுகூர்ந்தனர்.
அவருக்கு மரியாதை செலுத்தி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், "இந்தியாவின் ஏவுகணை மனிதரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான அப்துல் கலாமின் பிறந்ததினத்தில் அவரை நினைவுகூர்கிறேன். அவர் தொலைநோக்குப் பார்வையுடைய விஞ்ஞானியாகவும் தேசப் பற்றாளராகவும் சிறந்த தலைவராகவும் இருந்துள்ளார். அவரது மனிதநேயம், இரக்கம் மற்றும் மாணவர்களுடனான தொடர் கலந்துரையாடல் மூலம் அடுத்தடுத்த தலைமுறைகளை ஈர்க்கக்கூடியவராக திகழ்ந்து வருகிறார். தனது சொற்களாலும் செயல்களாலும் இளம் தலைமுறையினர் பெரிய இலக்குகளை அடைய கனவு காணவும் தேசக் கட்டமைப்புக்கு கடினமாக உழைக்கவும் வித்திட்டார். பாதுகாப்புத் துறை, அறிவியல், இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் என இந்தியா தற்சார்பு நிலையை அடைவதற்கான அவரின் பங்களிப்புகள் என்றும் நிலைத்திருக்கும்' என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், "கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும் என இளைஞர்களை ஊக்குவித்த அப்துல் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். பணிவும் கடின உழைப்பும் வெற்றிக்கு மிகவும் முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. அவர் நினைத்ததுபோல தற்சார்பு இந்தியாவை கட்டமைக்க நாம் தொடர்ந்து உத்வேகத்துடன் பணியாற்றுவோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அப்துல் கலாமுடனான தனது நினைவுகளை விடியோவாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.