ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி தில்லி உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணையை எதிர்கொண்டுவரும் கார்த்தி சிதம்பரம், வெளிநாடுகளுக்குச் செல்லும்போது விசாரணை நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டியிருந்த நிலையில், இனி வெளிநாடு பயணிக்கும் தகவலை விசாரணை நீதிமன்றத்துக்கும், விசாரணை அமைப்புக்கும் 2 வாரங்களுக்கு முன்னர் தெரிவித்தால் போதும் என்று ஜாமீன் நிபந்தனையை திருத்தி அமைத்து உயர்நீதிமன்ற நீதிபதி ரவீந்தர் டுடேஜா உத்தரவிட்டார்.
அதோடு, "தனது வெளிநாட்டுப் பயணத்தின் முழுமையான விவரத்தை விசாரணை நீதிமன்றத்திடமும், விசாரணை அமைப்பிடமும் பகிர்வதோடு, விசாரணை நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையில் தவறாமல் பங்கேற்க வேண்டும். வழக்கு விசாரணையை தேவையின்றி பல நாள்களுக்கு இழுத்தடிப்பு செய்வதற்கு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது' என்றும் நீதிபதி உத்தரவில் தெரிவித்தார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்தில் ரூ.305 கோடி அந்நிய முதலீடு செய்ய அனுமதி வழங்கியதில் அப்போதைய அமைச்சர் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் பலன் அடைந்ததாக கடந்த 2017-இல் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்துக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.