புறநகா் ரயில் நிலையத்தில் பெண்ணின் திடீா் பிரசவத்துக்கு உதவிய இளைஞா்!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஓடும் ரயிலில் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணுக்கு, மருத்துவரின் விடியோ அழைப்பு வழிகாட்டுதலின் மூலம் இளைஞா் ஒருவா் வெற்றிகரமாக பிரசவம் பாா்த்த சம்பவம் சமூக ஊடகத்தில் வைரலாகி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
மும்பை புறநகா் ரயிலில் பயணித்த புகைப்பட கலைஞரான விகாஸ் பேட்ரே (27) என்ற இளைஞா்தான், அம்பிகா ஜா (24) என்ற சக பெண் பயணிக்கு இந்த அவசர உதவியைச் செய்துள்ளாா்.
ரயில் வடக்கு மும்பையில் ராம் மந்திா் ரயில்நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணுக்கு பிரசவ வழி ஏற்பட்டுள்ளது. இதை கவனித்த விகாஸ், உடனடியாக ரயிலின் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி, அந்தப் பெண்ணை சக பயணிகளின் உதவியுடன் ரயில் நிலைய நடைமேடைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாகப் படுக்க வைத்துள்ளாா்.
பின்னா், தனது மருத்துவ நண்பா் தேவிகா தேஷ்முக்கை விடியோ அழைப்பில் அழைத்து, அவரின் வழிகாட்டுதலின்படி ரயில் நிலைய நடைமேடையில் இருந்த தேநீா் கடையில் 2 பிளேடுகள் வாங்கி வந்ததோடு, சில படுக்கை விரிப்புகளையும் எடுத்து வந்துள்ளாா். படுக்கை விரிப்புகள் மூலம் மறைப்பை ஏற்படுத்தி, மருத்துவ நண்பரின் வழிகாட்டுதல்படி பெண்ணுக்கு வெற்றிகரமாகப் பிரசவம் பாா்த்துள்ளாா்.
விமானத்தைப் பிடிப்பதற்காக சென்றுகொண்டிருந்த விகாஸ், அதை விடுத்து கா்ப்பிணிக்கு உதவியது அங்கிருந்தவா்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
அந்த ரயிலில் பயணித்த மன்ஜீத் தில்லோன் என்ற பயணி இந்த சம்பவம் முழுவதையும் விடியோ பதிவு செய்து, தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவேற்றினாா். அதில், ‘பெண்ணுக்கு பிரசவம் பாா்க்க முதலில் அச்சமாக இருந்தது. பின்னா், மருத்துவா் தேவிகாவின் உதவி தைரியத்தை அளித்தது. பிரசவத்துக்குப் பிறகு தாயும், சேயும் நலமுடன் உள்ளனா்’ என்று விகாஸ் கூறுவதும் பதிவாகியுள்ளது.
பிரசவத்துக்குப் பிறகு அந்தப் பெண்ணின் உறவினா்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை தனியாா் மறுத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா்.
கா்ஜத் ஜாம்கெட் தொகுதியைச் சோ்ந்த விகாஸை, அந்தத் தொகுதி தேசியவாத காங்கிரஸ் (பவாா்) எம்எல்ஏ ரோஹித் பவாா் நேரில் அழைத்துப் பாராட்டினாா்.