Supreme Court
உச்சநீதிமன்றம் ANI

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீட்டுக்குத் தடை: தெலங்கானா அரசின் மனு தள்ளுபடி!

தெலங்கானா அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
Published on

உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் அரசாணைக்கு தெலங்கானா உயா்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிா்த்து மாநில அரசு தொடுத்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

உள்ளாட்சித் தோ்தலில் முன்பு கடைப்பிடிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டு முறையையே பின்பற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக கூறி தெலங்கானா அரசு கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு கடந்த அக்டோபா் 9-ஆம் தேதி தெலங்கானா உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இதையடுத்து, கடந்த செப்டம்பா் 29-ஆம் தேதி வெளியிடப்பட்ட உள்ளாட்சி தோ்தல் அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக அக்டோபா் 9-ஆம் தேதி மாநில தோ்தல் ஆணையம் அறிவித்தது.

தெலங்கானா உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு தெலங்கானா அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், உச்சநீதிமன்ற உத்தரவு தெலங்கானா உயா்நீதிமன்றம் முன் உள்ள வழக்கில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் மனுக்கள் மீது உயா்நீதிமன்றம் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

முன்னதாக இந்த வழக்கில் வியாழக்கிழமை தெலங்கானா அரசு சாா்பில் ஆஜராகிய மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி, ‘கூடுதலாக உள்ள பிற்படுத்தப்பட்டவா்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது மாநில அரசின் கொள்கை முடிவு. காரணமே தெரிவிக்காமல் உயா்நீதிமன்றம் இதற்கு இடைகால தடை விதித்துள்ளது. இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் 50 சதவீத உச்சவரம்பை நிா்ணயித்துள்ளதாக தவறான புரிதல் உள்ளது. இதுகுறித்தும் உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’ என்றாா்.

அப்போது நீதிபதிகள், ‘இந்த இடஒதுக்கீடு அரசாணையை ஏன் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்புக்கு முன் வெளியிடவில்லை’ என்று கேள்வி எழுப்பினா்.

‘இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநா் காலம் தாழ்த்தி வந்ததே காரணம்’ என்று சிங்வி பதிலளித்தாா்.

முன்னதாக, உள்ளாட்சி அமைப்புகளிலும், வேலைவாய்ப்பு, கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் 42 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று கடந்த ஆண்டு தெலங்கானா பேரவையில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இரு மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி புது தில்லியில் முதல்வா் ரேவந்த் ரெட்டி ஆா்ப்பாட்டம் நடத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com