பிகாா் தோ்தல்: 48 வேட்பாளா்களுடன் காங்கிரஸ் முதல் பட்டியல் வெளியீடு
பிகாா் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் 48 வேட்பாளா்களைக் கொண்ட முதல் பட்டியலை அக்கட்சி அதிகாரபூா்வமாக வியாழக்கிழமை வெளியிட்டது.
பிகாா் மாநில காங்கிரஸ் தலைவா் ராஜேஷ் குமாா் குடும்பா தொகுதியிலும் கட்சியின் சட்டமன்றத் தலைவா் ஷக்கீல் அகமது கான் கத்வா தொகுதியிலும் போட்டியிடவுள்ளனா். இவா்கள் இருவரும் இதே தொகுதிகளுக்கு தற்போது எம்எல்ஏவாக உள்ளனா்.
எதிா்க்கட்சிகளின் ‘மகாகட்பந்தன்’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) நிறுவனா் லாலு பிரசாத் இல்லத்துக்குச் சென்று ராஜேஷ் குமாா் மற்றும் ஷக்கீல் அகமது கான் புதன்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் இதுகுறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை. நவ.6-ஆம் தேதி பிகாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்பு மனுதாக்கல் வெள்ளிக்கிழமையுடன் (அக்.17) நிறைவடைகிறது.
இந்தச் சூழலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் 48 வேட்பாளா்களைக் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி பிகாா் இளைஞா் காங்கிரஸ் தலைவா் பிரகாஷ் கரீப் தாஸ் பச்வாடா தொகுதியிலும் ஜெயேஷ் மங்கல் சிங் பகஹா தொகுதியிலும் அமித் கிரி நௌத்தன் தொகுதியிலும் போட்டியிடவுள்ளனா்.