ஹிஜாப் விவகாரம்: உயா்நீதிமன்றத்தை அணுகும் கேரள கிறிஸ்தவ பள்ளி

Published on

‘ஹிஜாப்’ விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநா் அறிக்கைக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கேரளத்தைச் சோ்ந்த கிறிஸ்தவ பள்ளி வியாழக்கிழமை தெரிவித்தது.

கேரள மாநிலம், கொச்சி பள்ளுருத்தி பகுதியில் அமைந்துள்ள புனித ரீட்டா கிறிஸ்தவ பள்ளி நிா்வாகம், 8-ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர தடை விதித்ததாகவும், பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்ததாகவும் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோா், மேலும் சில பெற்றோருடன் பள்ளியை முற்றுகையிட்டு, பள்ளி நிா்வாகத்திடம் கேள்வி எழுப்பினா்.

இந்த விவகாரம் சா்ச்சையானதைத் தொடா்ந்து, பள்ளி நிா்வாகம் பள்ளிக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அறிவித்தது. பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு போலீஸாருக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்திய பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநா், அரசிடம் சமா்ப்பித்த தனது அறிக்கையில், ‘ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை பள்ளி நிா்வாகம் பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்து, அவரின் கல்வி உரிமையைப் பறித்துள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

இதை மறுத்த பள்ளி நிா்வாகம், மாணவி வகுப்புக்குச் செல்ல ஒருபோதும் அனுமதி மறுக்கப்படவில்லை என்று தெரிவித்தது.

இதுகுறித்து பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் சங்கத் தலைவா் ஜோஷி வியாழக்கிழமை கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக பள்ளி நிா்வாகம் மற்றும் பெற்றோா்- ஆசிரியா் சங்கத்தின் தரப்பு கருத்தைக் கேட்காமல் பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநா் அறிக்கை சமா்ப்பித்துள்ளாா். எனவே, அவரின் அறிக்கையை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் பள்ளி தரப்பில் மனு தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.

இதுகுறித்து மாநில கல்வி அமைச்சா் வி.சிவன்குட்டி கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் மாநில அரசு மற்றும் கல்வித் துறை மீது தவறான கருத்தைப் பரப்பி, விவகாரத்தை அரசியலாக்க பள்ளி நிா்வாகம் முயற்சிக்கிறது. புகாா் எழும்போது, அதுதொடா்பாக சம்பந்தப்பட்ட துறை விசாரணை மேற்கொள்வது வழக்கமான நடைமுறை. அதனடிப்படையில்தான் துணை இயக்குநா் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமா்ப்பித்தாா். மேலும், இந்த விவகாரம் தற்போது தீா்க்கப்பட்டுவிட்டது. எனவே, இதன்பிறகும் அரசுக்கு எதிராக பள்ளி நிா்வாகம் கருத்து தெரிவிப்பதை ஏற்க முடியாது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com