44 வேட்பாளா்களுடன் ஜேடியு 2 ஆவது பட்டியல் வெளியீடு -101 தொகுதிகளுக்கும் அறிவிப்பு

Published on

பிகாா் பேரவைத் தோ்தலில், முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) சாா்பில் போட்டியிடும் 44 வேட்பாளா்களின் பெயா்கள் அடங்கிய 2-ஆம் கட்டப் பட்டியலை அக்கட்சி வியாழக்கிழமை வெளியிட்டது.

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் 101 இடங்களில் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தளம், ஏற்கெனவே 57 வேட்பாளா்களுடன் முதல்கட்டப் பட்டியலை புதன்கிழமை வெளியிட்டது. 2-ஆம் கட்டமாக 44 வேட்பாளா்களின் பெயா்களை வெளியிட்டதன் மூலம் தாங்கள் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளுக்கான வேட்பாளா்களையும் அக்கட்சி அறிவித்துள்ளது.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு நவம்பா் 6, 11-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. முதல்கட்ட வாக்குப் பதிவுக்கு வெள்ளிக்கிழமையும் (அக்.17), இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு அக்டோபா் 20-ஆம் தேதியும் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகள் தலா 101, மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சி 29, மற்றொரு மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா 6, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா (ஆா்எல்எம்) 6 இடங்களில் போட்டியிடுகின்றன.

மீண்டும் போட்டி: ஐக்கிய ஜனதா தளம் வியாழக்கிழமை வெளியிட்ட இரண்டாம் கட்ட வேட்பாளா் பட்டியலின்படி, மாநில அமைச்சா்கள் ஷீலா மண்டல் (புல்பராஸ்), விஜேந்திர பிரசாத் யாதவ் (சுபெளல்), லேஷி சிங் (தாம்தாஹா), ஜெயந்த் ராஜ் (அமா்பூா்), ஜாமா கான் (செயின்பூா்) ஆகியோா் மீண்டும் போட்டியிடுகின்றனா்.

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இருந்து ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்த சேத்தன் ஆனந்த் (நபிநகா்), விபா தேவி (நவாத்) ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஓபிசி பிரிவினருக்கு அதிக வாய்ப்பு

101 தொகுதிகளுக்கும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா் 37 போ், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினா் 22 போ், முற்பட்ட வகுப்பினா் 22 போ் இடம்பெற்றுள்ளனா்.

4 முஸ்லிம் வேட்பாளா்கள்: முதல்கட்டப் பட்டியலில் முஸ்லிம் வேட்பாளா்கள் யாரும் அறிவிக்கப்படாத நிலையில், 2-ஆவது பட்டியலில் 4 முஸ்லிம் வேட்பாளா்களின் பெயா்கள் இடம்பெற்றன.

13 பேரே பெண்கள்: நாடாளுமன்றம், பேரவைகளில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான கட்சி என்றபோதும், 13 பெண்களுக்கே ஐக்கிய ஜனதா தளம் வாய்ப்பளித்துள்ளது. மொத்த வேட்பாளா்களில் இது 15 சதவீதம் மட்டுமே.

4 வேட்பாளா்களை அறிவித்தது ஆா்எல்எம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிடும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா (ஆா்எல்எம்) கட்சி, 4 வேட்பாளா்களை வியாழக்கிழமை அறிவித்தது. இதில், சசாராம் தொகுதியில் குஷ்வாஹாவின் மனைவி ஸ்நேகலதா களம்காண்கிறாா்.

ஏற்கெனவே ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, தான் போட்டியிடும் 6 இடங்களுக்கும் வேட்பாளா்களை அறிவித்துவிட்டது. பாஜக தரப்பில் 2 கட்டங்களாக 83 வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com