
கர்நாடகத்தில் தனியார் கல்லூரியில் தன்னுடன் படித்து வந்த மாணவியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதாக மாணவர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படிப்பவர் ஜீவன் கௌடா (21). இவர் தன் கல்லூரியில் படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 64 ஆவது பிரிவின் கீழ் (பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை) கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
``அக்டோபர் 10 ஆம் தேதி மதிய உணவு இடைவேளையின்போது, தன்னைச் சந்திக்க வருமாறு இந்த மாணவியை ஜீவன் அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கல்லூரியின் 7 ஆவது தளத்தில் சந்திக்க வந்த மாணவியை, ஜீவன் பலவந்தமாக முத்தமிட முயன்றுள்ளார்.
இதனையடுத்து, ஜீவனிடமிருந்து தப்பித்து உடனடியாக மாணவி லிப்ட்டில் 6 ஆவது தளத்துக்குச் சென்றார். இருப்பினும், அவரைத் துரத்திச் சென்ற ஜீவன், அந்தத் தளத்தின் கழிப்பறைக்கு மாணவியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்’’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மாணவியிடம் `மாத்திரை வேண்டுமா?’ என்றும் ஜீவன் கேட்டுள்ளார். இந்தச் சம்பவத்தினையடுத்து, மிகவும் அச்சத்தில் இருந்த மாணவி, இதுகுறித்து தனது தோழிகளிடம் கூறியுள்ளார்.
தொடர்ந்து, தனது பெற்றோரிடம் தெரிவித்ததுடன் 5 நாள்களுக்குப் பிறகு காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
ஜீவன் கௌடா கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், சம்பவம் நடந்த 6 ஆவது தளத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால், தடயங்களைச் சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மாநில எதிர்க்கட்சியான பாஜக, ஆளும் காங்கிரஸ் அரசின் அலட்சியத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா, ``கர்நாடகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. 4 மாதங்களில் பெண்களுக்கு எதிராக 979 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. பெங்களூரில் மட்டும் 114 குற்றங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. குற்றத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கையின்மையால், பெண்களும் குழந்தைகளும் எப்போதும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.
மைசூரில் தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொன்றது முதல் கலபுரகியில் நூலகர் தற்கொலை செய்துகொண்டது வரையில் தெரிவது - நிர்வாகத் தோல்வி.
நமது சகோதரிகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பின்மையைக் கண்டு, பாஜக அமைதியுடன் இருக்காது. அரசு இதற்கு பதிலளித்தே ஆக வேண்டும். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக, பெண்களுக்கான தேசிய ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழுவை கர்நாடகத்துக்கு வரவழைக்க வலியுறுத்தி கடிதம் எழுதியதாகவும் அசோகா கூறினார்.
இதையும் படிக்க: லாட்டரி மோசடியில் ரூ.7.5 லட்சம் இழந்த அரசு ஊழியர்! எப்படி நடந்தது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.