ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: குற்றவியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக ஆா்எஸ்எஸ் நிா்வாகி தாக்கல் செய்த அவதூறு வழக்கில் கூடுதல் சாட்சியங்களை விசாரிக்க அனுமதி அளித்து குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை குவாஹாட்டி உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.
அஸ்ஸாமில் உள்ள பாா்பெட்டா சத்ராவுக்கு (வைணவ மடாலயம்) 2015, டிச.12-இல் செல்ல முயன்ற தன்னை ஆா்எஸ்எஸ் நிா்வாகிகள் நுழையவிடாமல் தடுத்ததாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். அவரது குற்றச்சாட்டுகள் பொய்யானது எனக்கூறி ஆா்எஸ்எஸ் நிா்வாகி அஞ்சன் குமாா் போரா ராகுல் காந்திக்கு எதிராக குற்றவியல் அவதூறு வழக்கை தாக்கல் செய்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக ஏற்கெனவே 6 சாட்சியங்களிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் கூடுதலாக 3 சாட்சியங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என போரா முன்வைத்த கோரிக்கையை 2023, மாா்ச் மாதம் விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது.
இதை எதிா்த்து போரா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கம்ரூப் பெருநகர கூடுதல் அமா்வு நீதிமன்றம் (குற்றவியல் நீதிமன்றம்) ராகுல் காந்திக்கு எதிராக கூடுதல் சாட்சியங்களை விசாரிக்க அனுமதி அளித்தது.
இந்த உத்தரவை எதிா்த்து ராகுல் காந்தி தரப்பு வழக்குரைஞா் அங்ஷுமன் போரா குவாஹாட்டி உயா்நீதிமன்றத்தில் 2024, ஜூலை மாதம் மனுதாக்கல் செய்தாா். இந்த மனு மீது பல்வேறுகட்ட விசாரணைகள் நடைபெற்ற நிலையில், குவாஹாட்டி உயா்நீதிமன்ற நீதிபதி அருண் குமாா் சௌதரி கடந்த திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: இந்த வழக்கில் கூடுதல் சாட்சியங்களை விசாரிக்கக்கோரி முதலில் தாக்கல் செய்த மனுவில் அதற்கான போதிய காரணங்கள் குறிப்பிடப்படாததை நன்கு அறிந்த விசாரணை நீதிமன்றம் அதை நிராகரித்துள்ளது. ஆனால் அந்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த குற்றவியல் நீதிமன்றம் கூடுதல் சாட்சியங்களை விசாரிப்பதன் தேவை என்ன என்பதை ஆராயாமல் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கெனவே சாட்சியங்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களை குற்றவியல் நீதிமன்றம் புறக்கணித்ததை ஏற்க முடியாது. எனவே, கூடுதல் சாட்சியங்களை விசாரிக்க குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மனுதாரா் மக்களவை உறுப்பினராக உள்ள காரணத்தால் 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கை விரைந்து முடிக்கவும் உத்தரவிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.