
தீபாவளியையொட்டி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்பவர்களால் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது. இதனால், பயணிகள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வருகிற திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை என்றாலே வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம்.
திங்கள்கிழமை தீபாவளி என்பதாலும், சனி, ஞாயிறு விடுமுறையுடன் பொதுமக்கள் பலரும் தங்கள் ஊர்களுக்கு இன்றே படையெடுக்கத் துவங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசலால் நகரங்கள் ஸ்தம்பிக்க ஆரம்பித்துவிட்டன.
பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள், பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சிறப்பு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே நடைமேடைகளில் நிற்க முடியாத அளவிற்கு பயணிகள் கூட்டம் அலைமோதியது. தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் கடைசி முயற்சியாக தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நாளை(அக்.18) சனிக்கிழமை பயணம் செய்வதற்கு இன்று(அக்.17) தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏசி இருக்கைகளுக்கு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத படுக்கையுடன் கூடிய இருக்கைகளுக்கு 11 மணிக்கும் முன்பதிவு தொடங்கியது.
இன்று காலை 10 மணிக்கு தட்கல் தொடங்கிய நிலையில், சில நிமிடங்களில் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் பயணிகள் சிக்கலுக்குள்ளாகினர். இதனால், ஸ்லீப்பர் முன்பதிவுக்கு காத்திருந்த பயணிகளும் ஏமாற்றமடைந்தனர்.
அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்ய இயலாது என ஐஆர்சிடிசி இணையதளம் தெரிவித்துள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.