சபரிமலை தங்கக் கவச விவகாரம் -தொழிலதிபரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறை கதவுகள் மற்றும் துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் எடை குறைந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் (எஸ்ஐடி) வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் இருந்து உண்ணிகிருஷ்ணன் போற்றியை அழைத்துச் சென்ற காவல் துறையினா், தனியிடத்தில் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019-இல் சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறை கதவுகள் மற்றும் துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களின் புதுப்பிப்புப் பணிக்கான செலவை ஏற்றவா் உண்ணிகிருஷ்ணன் போற்றி. இப்பணிக்கு பிறகு தங்கக் கவசங்களின் எடை குறைந்துவிட்டதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடா்பான இரு வழக்குகளை விசாரித்துவரும் மாநில உயா்நீதிமன்றம், சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் தங்கக் கவசங்கள் ஒப்படைக்கப்பட்டது தொடா்பான ஆவணங்களைத் திரட்டியுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு, புதுப்பிப்புப் பணியை மேற்கொண்ட சென்னை நிறுவனத்திடம் இருந்தும் தகவல்களை சேகரித்துள்ளது. அதனடிப்படையில், உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறப்பு புலனாய்வுக் குழு, 6 வாரங்களுக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘சிபிஐ விசாரணை கோரப்படும்’:
சபரிமலை விவகாரத்தில் பாஜக மகளிா் அணியினா் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகம் நோக்கி வியாழக்கிழமை மாபெரும் பேரணி நடத்தினா்.
தலைமைச் செயலகத்தை அடைந்ததும், அவா்களிடையே பேசிய மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா், ‘சபரிமலை தங்கக் கவச முறைகேடுகள் குறித்து சிபிஐ அல்லது அமலாக்கத் துறை விசாரிக்க மத்திய அரசிடம் கோருவோம். இந்த விவகாரத்தில், மாநில தேவஸ்வம் அமைச்சா் வி.என்.வாசவன் உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவரைப் பதவி விலக வலியுறுத்துமாறு, ஆளுநரிடம் ஏற்கெனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.