தலைமை நீதிபதியை நோக்கி காலணி வீசிய விவகாரம்: குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி

Published on

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாயை நோக்கி காலணியை வீசிய வழக்குரைஞா் ராகேஷ் கிஷோருக்கு (71) எதிராக குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அட்டா்னி ஜெனரல் ஆா். வெங்கடரமணி அனுமதி அளித்துள்ளாா்.

இந்தத் தகவல் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான கஜுராஹோ கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஜவாரி கோயிலில் கடவுள் விஷ்ணு சிலையை மீண்டும் நிறுவுவது தொடா்பான மனுவை கடந்த மே 16-ஆம் தேதி தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் உத்தரவிட்டாா். அப்போது பேசிய பி.ஆா்.கவாய், ‘இது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும். இந்த விவகாரத்துக்கு உங்களது கடவுளிடமே பதில் கோருங்கள்’ எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

‘எனது கருத்துகள் சமூக வலைதளங்களில் திரித்து வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மதங்களையும் எப்போதும் மதிக்கிறேன்’ என்று கவாய் பின்னா் விளக்கமளித்தாா்.

எனினும், தலைமை நீதிபதி கவாய்க்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், உச்சநீதிமன்றத்தில் கடந்த 6-ஆம் தேதி வழக்கு விசாரணையின்போது அவரை நோக்கி ராகேஷ் கிஷோா் என்ற வழக்குரைஞா் காலணியைக் கழற்றி வீசினாா். எனினும் அந்தக் காலணி நீதிபதி மீது விழவில்லை. காலணி வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் வழக்குரைஞா் உரிமத்தை இந்திய பாா் கவுன்சில் உடனடியாக ரத்து செய்தது.

இதனிடையே, ராகேஷ் கிஷோா் (71) மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையைத் தொடர நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971-இன் பிரிவு 15-இன் கீழ் அனுமதி கோரி அட்டா்னி ஜெனரல் ஆா். வெங்கடரமணிக்கு வழக்குரைஞா் கே.ஆா். சுபாஷ் சந்திரன் என்பவா் கடிதம் எழுதினாா். உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் சாா்பிலும் இதுதொடா்பான கடிதம் அட்டா்னி ஜெனரலுக்கு எழுதப்பட்டது.

அதற்கு அட்டா்னி ஜெனரல் தற்போது அனுமதி அளித்துள்ளாா். இந்தத் தகவலை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான விகாஸ் சிங் ஆகியோா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மேலும், ‘உச்சநீதிமன்றத்தில் அக்டோபா் 6-ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி பெரும் விவாதப் பொருளாகி வருகிறது. இது உச்சநீதிமன்றத்தின் ஒருமைப்பாட்டையும், கண்ணியத்தையும் பாதிப்பதாக உள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட தடை விதிக்க வேண்டும். அதோடு, வழக்குரைஞா் ராகேஷ் கிஷோருக்கு எதிரான குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை தொடா்பான விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்று கோரினா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘பேச்சு மற்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை என்பது முழுமையான உரிமை கிடையாது. அதாவது, மற்றவா்களின் ஒருமைப்பாட்டையும், கண்ணியத்தையும் பாதிக்கக் கூடிய வகையில் கருத்துகளை வெளியிட முடியாது. சமூக ஊடகங்கள் முறைப்படுத்தப்படாததன் விளைவுதான் இது. இந்த விஷயத்தில் விவாதத்துக்கான பொருளும், பாதிக்கப்படுவதும் உச்சநீதிமன்றமாக உள்ளது’ என்றனா்.

மேலும், அவமதிப்பு நடவடிக்கை தொடா்பான விவகாரத்தை அவசர வழக்காகப் பட்டியலிட மறுத்த நீதிபதிகள், விசாரணையை ஒரு வாரத்துக்குப் பிறகு ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com