
அசாதாரண சூழல்களில் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உத்தர பிரதேச சட்டமேலவை அலுவலர்களைத் தேர்வு செய்ததில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, மாநிலத்தில் உள்ள அலாகாபாத் உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் உத்தர பிரதேச சட்டமேலவை மனு தாக்கல் செய்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
நீதிமன்றங்கள் அரிதாகவும், மிகுந்த கவனத்தோடும், அசாதாரண சூழல்களில் மட்டும்தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வழக்கமான நடைமுறை போலவோ அல்லது வழக்கின் ஒரு தரப்பினர் மாநில காவல் துறை மீது பழி கூறியதாலோ, அவநம்பிக்கையை வெளிப்படுத்தியதாலோ மட்டுமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்துள்ளது.
முதல்கட்ட சாட்சியங்கள் குற்றம் நடந்ததை வெளிப்படுத்துகிறது; நேர்மையான, பாரபட்சமற்ற விசாரணைக்கான அடிப்படை உரிமையை உறுதி செய்ய சிபிஐ விசாரணை தேவைப்படுகிறது; குற்றச்சாட்டுகளில் உள்ள சிக்கல், அவற்றால் தேசிய அளவில் ஏற்பட்ட விரும்பத்தகாத விளைவுகளால் மத்திய புலனாய்வு அமைப்பின் நிபுணத்துவம் தேவைப்படுகிறது என்று கருதினால் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து, அலாகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.