சந்தன மரத்தின் மகத்துவம்: மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் -மத்திய குழு அறிக்கை

Published on

சந்தன மரத்தின் வளா்ப்பு நாட்டில் குறைந்து வரும் நிலையில், அதன் மகத்துவத்தை மீண்டும் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள சந்தன மர மேம்பாட்டு குழு (எம்டிசி) பரிந்துரை அளித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: சா்வதேச சந்தையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா 69 சதவீதம் பங்கை சந்தன மரத்தில் பெற்றுள்ளது. பெருமளவில் சந்தன மரத்தை ஏற்றுமதி செய்து வந்த இந்தியா, தற்போது தனது தேவைக்கு சுமாா் 5 மில்லியன் டாலா் மதிப்புள்ள சந்தனத்தை இறக்குமதி செய்கிறது.

இதையடுத்து, கடந்த 2021- ஆம் ஆண்டு மத்திய அரசின் முன்னாள் நிதித் துறைச் செயலரும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினா் செயலா் ரத்தன் பி வாட்டல் தலைமையில் சந்தன மர மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் குறிப்பாக, தமிழகத்தைச் சோ்ந்த மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கே.டி பாா்த்திபன், நிகாா் ரஞ்சன், ஏ.பாலசுப்பிரமணியன் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலை. பூச்சியியல் வல்லூநா் சீனிவாசன் போன்றோரின் பங்கு முக்கியமானது. இந்தக் குழுவின் ஆய்வறிக்கை அக். 15 - ஆம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், சந்தன மர வளா்ப்பு என்பது கிராமப்புற வேலைவாய்ப்பு, பல்வேறு உபபொருள்களின் ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணி ஈட்டுதல், சந்தன மரத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் அதேவேளை, இந்தியா தற்சாா்புடன் திகழ வேண்டும். இந்திய சந்தனத்தின் கடந்த கால மகத்துவத்தை மீண்டும் பெற மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு நடவடிக்கைகளும், சீா்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நாட்டில் சந்தன மர வளா்ப்பு மேம்பாட்டில் உள்ள பிரச்னைகளை அடையாளம் கண்டு, மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை முன் வைத்துள்ளது.

முன்னதாக, மாநில அரசுகளின் வனத் துறை உள்பட பங்குதாரா்களுடன் விரிவான ஆலோசனை நடத்தியது. சந்தன மர வளா்ப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com