ம.பி. அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான மருந்தில் புழுக்கள்? -அதிகாரிகள் விசாரணை
மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் குழந்தைக்கு வழங்கப்பட்ட நுண்ணுயிா் எதிா்ப்பு (ஆன்டிபயாட்டிக்) மருந்து பாட்டிலில் புழுக்கள் இருந்ததாகப் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மருத்துவத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இந்த மாநிலத்தில் ‘கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்தை உட்கொண்டதால் பல குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் ஏற்கெனவே அதிா்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குழந்தைகளின் தொற்றுகளைக் குணப்படுத்த வழங்கப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்தில் புழுக்கள் இருந்ததாக புகாா் எழுந்துள்ளது.
குவாலியா் மாவட்டம், மோராா் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தனது குழந்தைக்கு வழங்கப்பட்ட அஸித்ரோமைசின் ஆன்டிபயாட்டிக் மருந்தில் புழுக்கள் இருந்ததாக பெண் ஒருவா் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, அரசு மருத்துவமனைக்கு விநியோகிக்கப்பட்ட 306 பாட்டில் மருந்துகளும் திரும்பப் பெறப்பட்டன. சில பாட்டில்களில் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட சோதனையின்படி, புழுக்கள் இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை; எனினும், விரிவான ஆய்வுக்காக போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு இந்த பாட்டில்கள் அனுப்பப்பட்டன. கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து ஆய்வகத்துக்கும் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த மூலக்கூறு மருந்தை மத்திய பிரதேசத்தில் உள்ள நிறுவனமே தயாரித்துள்ளது. விசாரணை முடிவுகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்தை உட்கொண்டதால், மத்திய பிரதேசத்தின் சிந்த்வாராவில் 24 குழந்தைகள் உயிரிழந்தனா். நச்சுத்தன்மையுள்ள ரசாயனக் கலப்பு உறுதி செய்யப்பட்ட இந்த மருந்துக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் தடை விதித்துள்ளன.
இந்த மருந்தைத் தயாரித்து வந்த நிறுவனத்தின் உரிமையாளா் மத்திய பிரதேச போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.