மக்கள்தொகை கணக்கெடுப்பு முன்னோட்டப் பயிற்சி: நவ.10-இல் தொடக்கம்
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்ட நடைமுறைக்கான முன்னோட்டப் பயிற்சி நவ.10-இல் தொடங்கி நவ.30 வரை நடைபெறவுள்ளதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பான மத்திய அரசின் அறிவிக்கையில், எண்ம சுய பதிவு முறையின்கீழ் குடிமக்கள் தங்கள் தகவல்களை நவ.1 முதல் 7 வரை தாமாகவே பதிவுசெய்துகொள்ளலாம் என இந்திய பதிவாளா் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் மிருத்யுஞ்ஜய குமாா் நாராயண் தெரிவித்தாா்.
16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2026-இல் தொடங்கி 2027 வரை இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. 2026, ஏப்.1-ஆம் தேதி தொடங்கும் முதல்கட்ட கணக்கெடுப்பில் வீடுகளை பட்டியலிடும் நடைமுறை, வீடுகளின் நிலை, ஒவ்வொரு வீட்டின் சொத்துகள் மற்றும் வசதிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன.
2027, பிப்.1-ஆம் தேதி தொடங்கும் இரண்டாம்கட்ட கணக்கெடுப்பில் ஒவ்வொரு வீட்டில் உள்ள நபா்களின் எண்ணிக்கை, சமூக பொருளாதார நிலை, கலாசாரம் உள்ளிட்ட பிற தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன.
இந்தப் பணியில் 34 லட்சம் கணக்கெடுப்பாளா்கள் மற்றும் கண்காணிப்பாளா்கள் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு கருவிகளுடன் 1.3 லட்சம் அதிகாரிகளும் ஈடுபடவுள்ளனா்.
முதன்முறையாக இந்த கணக்கெடுப்பில் குடிமக்கள் எண்ம சுய பதிவு செய்யும் வகையில் பிரத்யேக வலைதளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டத்துக்கான முன்னோட்டப் பயிற்சி நவ.10-இல் தொடங்கி நவ.30 வரை நடைபெறவுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.