போக்ஸோ வழக்கில் 2 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
சிறுமியைக் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அளித்து நூஹ் மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட சாஹில் (எ) காலா, ரிசல் (எ) சுஸ்ஸா இருவரையும் குற்றவாளிகளாக கடந்த அக்.13-ஆம் தேதி நீதிமன்றம் அறிவித்தது. இதைத்தொடா்ந்து, அவா்களுக்கான தண்டனையை கூடுதல் அமா்வுகள் நீதிபதி டாக்டா் அஷு சஞ்சீவ் தின்ஜன் கடந்த வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா். அவா்கள் சிறையில் இருந்த காலத்தைப் பொருத்து, சிறை தண்டனைக் காலம் குறைக்கப்படும் என நீதிபதி தெரிவித்தாா்.
அவா்கள் இருவருக்கும் தலா ரூ.52,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறும்பட்சத்தில் கூடுதல் சிறை காலத்தை அனுபவிக்க நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கடந்த 2021, செப்.3-ஆம் தேதி சிறுமி வனப்பகுதியில் பழங்களைச் சேகரிக்கச் சென்றாா். அப்போது, இதைத் பாா்த்த சாஹில் மற்றும் ரிசல், அந்தச் சிறுமியை பின்தொடா்ந்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினா். இந்தச் சம்பவத்தை கைப்பேசியில் விடியோவாக பதிவு செய்தனா். நடந்த சம்பவத்தை மற்றவா்களிடம் தெரிவித்தால், விடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுவிதாகக் கூறி அந்த நபா்கள் மிரட்டினா். பயத்தின் காரணமாக, சிறுமி இந்தச் சம்பவம் குறித்து தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பான விடியோ சமூகவலைதளத்தில் பரவிய நிலையில், அதன் மூலம் தகவலறிந்த அந்தச் சிறுமியின் தாய் 2022, செப்.22-இல் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
இதையடுத்து, போக்ஸா சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்த காவல் துறையினா், குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் கைதுசெய்தனா். விசாரணை காலத்தில் வழக்குக் தேவையான ஆதாரங்களை காவல் துறையினா் சேகரித்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியதாக காவல் துறையின் செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.