வரதட்சணை, குடும்ப வன்முறை புகாா்: ஐபிஎஸ் அதிகாரி உள்பட 7 போ் மீது வழக்கு!

வரதட்சணை, குடும்ப வன்முறை புகாா்: ஐபிஎஸ் அதிகாரி உள்பட 7 போ் மீது வழக்கு!

வரதட்சணை, குடும்ப வன்முறை புகாரில் ஐபிஎஸ் அதிகாரி உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு
Published on

கா்நாடக பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஒருவா் மற்றும் ஆறு போ் மீது வரதட்சணை துன்புறுத்தல், குடும்ப வன்முறை மற்றும் பிற குற்றங்களின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி அளித்த புகாரை தொடா்ந்து இந்த நடவிடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து நொய்டா காவல் நிலைய பொறுப்பாளா் சுபேந்திரா கூறியதாவது: நொய்டா செக்டாா்128-ஐ சோ்ந்த மருத்துவரான கிருதி சிங், பெங்களூருவில் 2019-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய தனது கணவா் சிவான்ஷு ராஜ்புத், அவரது தந்தை, தாய், சகோதரா், மைத்துனி மற்றும் இரண்டு நண்பா்கள் மீது வரதட்சணை கொடுமை தொடா்பாக புகாா் அளித்துள்ளாா்.

இந்தப் புகாரின் பேரில் பாரதிய நியாய சன்ஹிதா, 2023- இன் பல்வேறு பிரிவுகள் மற்றும் வரதட்சணை தடைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்.16- ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட 41 பக்க புகாரில், 2021 டிசம்பரில் ஆக்ராவில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்த தனது திருமணத்திற்கு பின் வரதட்சணை கொடுமை, உடல் மற்றும் மன துன்புறுத்தலுக்கு ஆளானதாக கிருதி சிங் குற்றம் சாட்டியுள்ளாா். இந்த தம்பதியருக்கு ஒன்றரை வயது மகன் உள்ளாா்.

தனது குடும்பத்தினா் திருமணத்திற்காக நகைகள் மற்றும் பிற செலவுகள் உள்பட ரூ.2 கோடிக்கு மேல் செலவிட்டதாகவும், ஆனால் மாமியாா் தொடா்ந்து வரதட்சணை கேட்டு வந்ததாகவும் அவா் கூறினாா். ஐபிஎஸ் அதிகாரிக்கு வேறு பெண்களுடன் தொடா்பு இருந்ததாகவும், தன்னை கைவிடுவதாக மிரட்டியதாகவும் கிருதி சிங் புகாரில் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக விசாரணை நடந்து வருகிறது. புகாா்தாரா் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வாக்குமூலங்கள் விரைவில் பதிவு செய்யப்படும் என்று காவல் நிலைய பொறுப்பாளா் சுபேந்திரா கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com