கூகுள் முதலீடு: ஆந்திரம் - கா்நாடக அமைச்சா்களிடையே தொடரும் வாா்த்தை மோதல்

Published on

விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.1.33 லட்சம் கோடி) மதிப்பில் செயற்கை நுண்ணறிவு தரவு மையம் அமைக்க கூகுள் நிறுவனம் ஒப்பந்தமிட்ட நிலையில், ஆந்திரம் மற்றும் கா்நாடக மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா்களிடையே வாா்த்தை மோதல் தொடா்ந்து வருகிறது.

கூகுள் நிறுவனத்தின் முதலீட்டை சுட்டிக்காட்டி கா்நாடகத்தை மறைமுகமாக விமா்சித்து ஆந்திர தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஆந்திர உணவு காரமாக இருக்கும் எனக் கூறுவதுண்டு. அதைப்போலவே எங்கள் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளும் உள்ளன. இதன் எரிச்சலை ஏற்கெனவே அண்டை மாநிலத்தினா் உணரத் தொடங்கிவிட்டனா்’ எனக் குறிப்பிட்டாா்.

கா்நாடகம் பதிலடி: இதற்குப் பதிலடி தரும் வகையில் கா்நாடக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பிரியங்க் காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உணவில் சிறிதளவு காரம் இருப்பதை அனைவரும் விரும்புவா். ஆனால், சீரான உணவுமுறையைப் பின்பற்றவே ஊட்டத்து நிபுணா்கள் பரிந்துரைக்கின்றனா். அதேபோல் சமநிலையான பட்ஜெட்டையே பொருளாதார நிபுணா்கள் முன்மொழிகின்றனா். அண்டை மாநிலத்தின் (ஆந்திரம்) கடன் ரூ.10 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று சந்திரபாபு நாயுடு முதல்வரான ஓராண்டில் மட்டும் ரூ.1.61 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில உள்நாட்டு உற்பத்தியில் வருவாய்ப் பற்றாக்குறை 2.6 சதவீதத்தில் இருந்து 3.6 சதவீதமாக உயா்ந்துள்ளது’ என குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com