மம்தா பானா்ஜி
மம்தா பானா்ஜி ANI

கூா்கா சமுதாய விவகாரம்: பிரதமா் மோடிக்கு மம்தா கடிதம்

கூா்கா சமுதாய விவகாரம்: பிரதமா் மோடிக்கு மம்தா கடிதம்
Published on

மேற்கு வங்கத்தில் டாா்ஜீலிங் மலைகள், தராய் மற்றும் துவாா்ஸ் பகுதிகளில் வசிக்கும் கூா்கா சமுதாயத்தினரின் பிரச்னைகளை விவாதிக்க, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ்குமாா் சிங்கை மத்தியஸ்தராக நியமித்ததற்கு அதிருப்தி தெரிவித்து, பிரதமா் மோடிக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சனிக்கிழமை கடிதம் எழுதினாா்.

அந்தக் கடிதத்தில் அவா் தெரிவித்ததாவது:

மேற்கு வங்க அரசின் கீழ், டாா்ஜீலிங் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கி சுயாட்சி அமைப்பாக கூா்காலாந்து பிரதேச நிா்வாகம் (ஜிடிஏ) செயல்பட்டு வருகிறது. கூா்காக்களின் இன அடையாளத்தைப் பாதுகாக்கவும், அந்த பிரதேசத்தில் சமூக-பொருளாதாரம், உள்கட்டமைப்பு, கல்வி, கலாசாரம், மொழி வளா்ச்சி உள்ளிட்டவற்றை உறுதி செய்யவும் ஜிடிஏ உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் டாா்ஜீலிங் மலைகள், தராய் மற்றும் துவாா்ஸ் பகுதிகளில் வசிக்கும் கூா்கா சமுதாயத்தினரின் பிரச்னைகளை விவாதிக்க, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ்குமாா் சிங்கை மத்தியஸ்தராக மத்திய அரசு நியமித்துள்ளது. மேற்கு வங்க அரசுடன் எந்தவொரு ஆலோசனையும் மேற்கொள்ளாமல் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் அந்த பிரதேசத்தின் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கு எதிராக இருக்கும். எனவே பங்கஜ்குமாா் சிங்கின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினாா்.

X
Dinamani
www.dinamani.com