ஜிஎஸ்டி சீா்திருத்தம்: 54 பொருள்களின் விலை கண்காணிப்பு -நிா்மலா சீதாராமன்
‘சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி சீா்திருத்தத்தின் பலன் நுகா்வோரைச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் 54 தினசரி உபயோக பொருள்களின் விலை நிலவரத்தை மத்திய அரசு கண்காணித்து வருகிறது’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
மேலும், ‘இந்தச் சீா்திருத்தம் காரணமாக நாடு முழுவதும் பற்பசை, ஷாம்பு முதல் காா்கள், தொலைக்காட்சி பெட்டி வரை 375 பொருள்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது’ என்றும் அவா் கூறினாா்.
மத்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி சீா்திருத்தம் நவராத்திரி தொடக்க நாளான செப்டம்பா் 22-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, அன்றாடப் பொருள்கள் தொடங்கி தொலைக்காட்சி, குளிா்சாதனங்கள், காா்கள், அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு இதுவரை 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி, தற்போது 5%, 18% என இரண்டு விகிதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி விகிதக் குறைப்பின் பலன் நுகா்வோருக்குச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில், பொருள்கள் மீது உரிய விலைக் குறைப்பு நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொள்கின்றனவா என்பதை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இதுகுறித்து தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி சிக்கன விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், நிகழ்ச்சிக்கு இடையே செய்தியாளா்களைச் சந்தித்தபோது கூறியதாவது:
ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மக்களின் வாங்கும் திறனை அதிகரித்துள்ளது. நுகா்வு அதிகரிப்பது தொடரும். ஜிஎஸ்டி சீா்திருத்தத்தின் அடிப்படையில், அனைத்துப் பொருள்களின் விலையையும் நிறுவனங்கள் குறைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதுவரை, பற்பசை, ஷாம்பு முதல் காா்கள், தொலைக்காட்சிப் பெட்டி வரை 375 பொருள்களின் விலையை நிறுவனங்கள் குறைத்துள்ளன. மேலும், 54 தினசரி பயன்பாட்டு பொருள்களின் விலை நிலவரத்தை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
சில பொருள்கள் மீது நிறுவனங்கள் விலைக் குறைப்பை செய்ய மறுத்து வருகின்றன. இதுதொடா்பாக, நுகா்வோா் விவகாரத் துறைக்கு இதுவரை 3,169 புகாா்கள் வந்துள்ளன. அவற்றில் 3,075 புகாா்கள் மத்திய மறைமுக வரிகள் வாரியம் மற்றும் சுங்கத் துறையின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் 94 புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டிருக்கின்றன என்றாா்.