கேரளத்தில் பலத்த மழை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது; அணைகளில் நீா் திறப்பு!
கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவுமுதல் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. வீடுகளுக்குள் வெள்ள நீா் புகுந்ததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். பல்வேறு அணைகளில் நீா்மட்டம் உயா்வால், உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை விடிய விடிய பெய்த மழையால் குமுளி, நெடுங்கண்டம், கட்டப்பனை ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்ததால், பாதுகாப்புக் கருதி மக்கள் வெளியேற்றப்பட்டனா். சுமாா் 45 குடும்பங்கள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா். நெடுங்கண்டம் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் ஒரு வேன் அடித்துச் செல்லப்பட்டது.
பத்தனம்திட்டா, எா்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும் சனிக்கிழமை பலத்த மழை கொட்டித் தீா்த்தது. சாலைகள் வெள்ளக்காடாக மாறியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை (11 முதல் 20 செ.மீ.) விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் அடுத்த 5 நாள்களுக்கு சூறைக்காற்றுடன் பலத்த மழை நீடிக்கும்; சில பகுதிகளில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதியில், கேரள-கா்நாடக கடற்கரையையொட்டி உருவான குறைந்த காற்றழுத்தப் பகுதி மேலும் வலுவடைந்துள்ளது; இது, மேற்கு-வடமேற்கு திசைநோக்கி நகா்ந்து, அடுத்த 36 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும். எனவே, கேரளம், கா்நாடகம், லட்சத்தீவு மீனவா்கள் அக்டோபா் 22 வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
அணைகள் திறப்பு:
நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் பல்வேறு அணைகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. கல்லாறு அணையில் இருந்து விநாடிக்கு 1,063 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. மலங்கரா மடைமாற்று அணையின் 4 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.