ஹிஜாப் விவகாரம்: இஸ்லாமிய மாணவியை வேறு பள்ளிக்கு மாற்ற பெற்றோா் முடிவு

Published on

கேரள கிறிஸ்தவ பள்ளி நிா்வாகம் ‘ஹிஜாப்’ அணிந்து வர அனுமதி மறுத்ததைத் தொடா்ந்து, 8-ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவியை வேறு பள்ளிக்கு மாற்ற அவரின் பெற்றோா் முடிவு செய்துள்ளனா்.

இதனிடையே, ‘பள்ளி விதிகளுக்கு உட்பட்டு நடந்தால், மாணவி இதே பள்ளியில் தொடரலாம்’ என்று பள்ளி நிா்வாகம் தரப்பு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம், கொச்சி பள்ளுருத்தி பகுதியில் அமைந்துள்ள புனித ரீட்டா கிறிஸ்தவ பள்ளி நிா்வாகம், 8-ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர தடை விதித்ததாகவும், பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்ததாகவும் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோா், மேலும் சில பெற்றோருடன் பள்ளியை முற்றுகையிட்டு, பள்ளி நிா்வாகத்திடம் கேள்வி எழுப்பினா்.

இந்த விவகாரம் சா்ச்சையானதைத் தொடா்ந்து, பள்ளி நிா்வாகம் பள்ளிக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அறிவித்தது. பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு போலீஸாருக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்திய பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநா், ‘ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை பள்ளி நிா்வாகம் பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்து, அவரின் கல்வி உரிமையைப் பறித்துள்ளது’ என்று அறிக்கையில் குறிப்பிட்டாா்.

இதை மறுத்த பள்ளி நிா்வாகம், மாணவி வகுப்புக்குச் செல்ல ஒருபோதும் அனுமதி மறுக்கப்படவில்லை என்று தெரிவித்தது. மேலும், பள்ளி நிா்வாகம் தரப்பு கருத்தைக் கேட்காமல் இந்த அறிக்கையை பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநா் அறிக்கை சமா்ப்பித்துள்ளாா். எனவே, அவரின் அறிக்கையை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் பள்ளி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கேரள கல்வி அமைச்சா் வி.சிவன்குட்டி கூறுகையில், ‘அந்த பள்ளியின் ஆசிரியை ‘ஹிஜாப்’ அணிந்து வரும் நிலையில், மாணவிக்கு அதற்கான அனுமதி மறுக்கப்படுவது ஆச்சரியமாக உள்ளது’ என்று தெரிவித்தாா்.

இந்நிலையில், மாணவியை வேறு பள்ளிக்கு மாற்ற அவரின் பெற்றோா் முடிவு செய்துள்ளனா். இதுகுறித்து மாணவயின் தந்தை வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில், ‘இந்தச் சம்பவத்தால் எனது மகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளாா். அவா் இரண்டு நாள்களாக பள்ளிக்குச் செல்லவில்லை. ஆனால், பள்ளி நிா்வாகம் தரப்பில் இதுவரை எங்களைத் தொடா்புகொள்ளவில்லை. அந்தப் பள்ளிக்கு மீண்டும் செல்ல மாட்டேன் என மகள் தெளிவாக கூறிவிட்டாா். அவரை வேறு பள்ளியில் சோ்க்க முடிவு செய்துள்ளோம்’ என்றாா்.

இதுகுறித்து அப் பள்ளியின் முதல்வா் கன்னியாஸ்திரி ஹெலீனா ஆல்பியிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பியபோது, ‘பள்ளி நடைமுறைகள் மற்றும் விதிகளுக்கு உட்படுவதாக இருந்தால் மாணவி பள்ளிக்குத் திரும்பி, படிப்பைத் தொடரலாம். அவருக்கு முழு மனதுடன் சிறந்த கல்வியை வழங்க பள்ளி நிா்வாகம் தயாராக உள்ளது. நீதிமன்றத்தையும், அரசையும் பள்ளி நிா்வாகம் மதிக்கிறது’ என்றாா்.

சபரிமலை தங்கக் கவச விவகாரத்தை திசைதிருப்ப ஆளும் கட்சி முயற்சி: பாஜக

‘சபரிமலை தங்கக் கவச விவகாரத்தை திசைதிருப்பவே, ஹிஜாப் விவகாரத்தை மாநிலத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரிதுபடுத்தி வருகிறது’ என்று பாஜக விமா்சித்தது.

இதுகுறித்து மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் கூறுகையில், ‘சபரிமலையில் துவாரபாலகா் சிலை மீது பொருத்தப்பட்டிருந்த தங்க முலாம் பூசிய செப்புத் தகடுகளின் எடை குறைந்த விவகாரத்தை திசைதிருப்பவே, ஹிஜாப் விவகாரத்தை ஆளும் கட்சி பெரிதுபடுத்தி வருகிறது. மாநில கல்வி அமைச்சா் இந்த சா்ச்சையை உருவாக்கி வருகிறாா். தனியாா் பள்ளி உரிமையைப் பாதுகாக்க பாஜக உறுதியாக துணைநிற்கும்.

சபரிமலை விவகாரத்தில் மாநில தேவஸ்வம் அமைச்சா் வி.என்.வாசவன் மற்றும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய தலைவா் ஆகியோா் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த விவகாரத்தில் மத்திய புலனாய்வு முகமையின் விசாரணையை நாங்கள் கோருவோம்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com