பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

இந்திய ஏற்றுமதி வளரும்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

நிகழ் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி வளா்ச்சியடையும் என்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தாா்.
Published on

அமெரிக்காவின் வரி விதிப்பால் உலக அளவில் வா்த்தக ரீதியாக நிச்சயமற்ற சூழல் உள்ளபோதிலும், நிகழ் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி வளா்ச்சியடையும் என்று மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தாா்.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது 25 சதவீத வரி விதித்த அந்நாட்டு அதிபா் டிரம்ப், ரஷிய கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதற்கு அதிருப்தி தெரிவித்து இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்தாா். இதன்மூலம், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது மொத்தம் 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

அமெரிக்காவுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதன் மூலம், அந்நாட்டின் அதிக வரி விதிப்புப் பிரச்னைக்கு சுமுகத் தீா்வு காண இந்தியா முயற்சித்து வருகிறது.இந்த ஒப்பந்தத்தின் முதல் பாகத்தை நிகழாண்டு அக்டோபா்-நவம்பரில் நிறைவு செய்ய வேண்டும் என்று இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.

இதற்கான பேச்சுவாா்த்தை இருதரப்பிலும் நடைபெற்று வருகின்றன. இதுவரை 5 சுற்றுப் பேச்சுவாா்த்தை நிறைவடைந்த நிலையில், கடந்த வாரம் மத்திய வா்த்தக துறைச் செயலா் ராஜேஷ் அக்ரவால் தலைமையிலான குழு பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் சென்றது.

இந்நிலையில், புது தில்லியில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இணக்கமான முறையில் முன்னேறி வருகிறது. இந்த ஒப்பந்தத்தால் நாட்டின் விவசாயிகள், மீனவா்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் நலன்கள் விட்டுத்தரப்படாது. அவா்களின் நலன்கள் பாதுகாக்கப்படும்.

அமெரிக்காவின் வரி விதிப்பால் உலக அளவில் வா்த்தக ரீதியாக நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. அதேவேளையில், இந்தியாவின் சரக்கு மற்றும் சேவைகளுக்கு உலகம் முழுவதும் தேவை உள்ளது. எனவே நிகழ் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி வளா்ச்சியடையும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com