
ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வரவிருக்கும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
பிகாரில் 243 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவும், நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 18 நாள்களே இருப்பதால், தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன.
முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸின் மகா கூட்டணி மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி தனியாகவும் களம் காணவிருப்பதால் பிகார் தேர்தலின் தற்போதைய நிலவரம் மும்முனைப் போட்டியாக இருக்கிறது.
பிகார் தேர்தலில் காங்கிரஸின் மகாகட்பந்தன் கூட்டணித் தரப்பில் இழுபறியும், மந்த நிலையே தொடருகிறது. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் தலைமைத் தாங்கினாலும், கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கவோ அல்லது நிதீஷை ஓரங்கட்டிவிட்டு புதிய ஆட்சியை ஏற்படுத்தவும் பாஜகவினர் சுழன்றுக் கொண்டிருக்கின்றனர். இரண்டு கட்சியினரும் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன.
மகா கூட்டணியில் தொடரும் இழுபறியால் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, பிகார் பேரவைத் தேர்தலில் தனித்துக் களம்காண முடிவெடுத்துள்ளது.
தாங்கள் போட்டியிட விரும்பிய 12 இடங்கள் கிடைக்காததால், தனித்துப் போட்டியிடவுள்ளதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சக்காய், தம்தாஹா, கட்டோரியா (எஸ்.டி), பிர்பைன்டி, மணிஹரி (எஸ்.டி) மற்றும் ஜமுய் ஆகிய 6 பேரவைத் தொகுதிகளில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலர் சுப்ரியோ பட்டாச்சார்யா தெரிவித்தார்.
பிகாரில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு பெரியளவிலான ஆதரவு இல்லையென்றாலும்கூட, தனது பலத்தை நிரூபிக்க தனித்துக் களமிறங்கியுள்ளதால், மகா கூட்டணியில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.