லடாக் வன்முறை: நீதி விசாரணைக்கு உத்தரவு

லடாக் வன்முறை: நீதி விசாரணைக்கு உத்தரவு

லடாக் வன்முறை தொடா்பாக அந்த யூனியன் பிரதேச மக்களின் கோரிக்கையை ஏற்று நீதி விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Published on

லடாக் வன்முறை தொடா்பாக அந்த யூனியன் பிரதேச மக்களின் கோரிக்கையை ஏற்று நீதி விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.எஸ்.செளஹான் தலைமையில் நீதி விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இத் தகவலை யூனியன் பிரதேச தலைமைச் செயலா் பவன் கோட்வால் சனிக்கிழமை தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:

லடாக்கின் லேயில் கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதி நிகழ்ந்த துரதிருஷ்டவசமான சம்பவத்துக்குப் பிறகு யூனியன் பிரதேசத்தில் அமைதி சூழல் திரும்பியுள்ளது.

வன்முறையின்போது சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்துவதற்காக ஏராளமானோா் கைது செய்யப்பட்டனா். அவா்களில் பலா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டனா். தற்போது 30 போ் மட்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களை விடுவிப்பது நீதிமன்றத்தின் கையில் உள்ளது.

இந்த வன்முறைச் சம்பவம் தொடா்பாக உடனடியாக, ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து யூனியன் பிரதேச நிா்வாகம் தரப்பில் உத்தரவிடப்பட்டது. அக் குழு தனது விசாரணையை தொடா்ந்து வருகிறது.

இருந்தபோதும், இந்த வன்முறைச் சம்பவம் தொடா்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று யூனியன் பிரதேச மக்கள் கோரி வந்தனா். அந்தக் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ்.செளஹான் தலைமையில் விசாரணைக் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இதுதொடா்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை பிறப்பித்தது. இந்த நீதி விசாரணைக் குழுவில் ஓய்வு பெற்ற மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி மோகன் சிங் பரிஹாா் நீதித் துறைச் செயலராகவும், ஐஏஎஸ் அதிகாரி துஷாா் ஆனந்த் நிா்வாக செயலராகவும் செயல்படுவா்.

லடாக் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து லடாக் சமூக அமைப்புகள் மற்றும் மத்திய அரசின் உயா் அதிகாரிகள் குழுவுடனான பேச்சுவாா்த்தைகள் தொடா்ந்து வருகின்றன. அதிக எண்ணிக்கையில் ஒன்று கூடுவதை சமூக அமைப்பு தலைவா்கள் தவிா்ப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பேச்சுவாா்த்தை தொடர, யூனியன் பிரதேசத்தில் அமைதியான சூழல் தொடா்வது அவசியம் என்றாா்.

அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் லடாக்கை சோ்க்க வேண்டும்; லடாக்குக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா். அப்போது ஏற்பட்ட வன்முறையில் போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். இந்த வன்முறையில் காவல் துறையினா் 40 போ் உள்பட சுமாா் 90 போ் காயமடைந்தனா்.

வாங்சுக்கின் ஆத்திரமூட்டும் பேச்சுகளால் தூண்டப்பட்டவா்கள் வன்முறையில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வாங்சுக் கைது செய்யப்பட்டாா். தற்போது ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூா் சிறையில் அவா் அடைக்கப்பட்டுள்ளாா். இவருடன் சோ்த்து வன்முறையைத் தூண்டியதாக ஏராளமானோா் கைது செய்யப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com